லண்டனில் 39 உடல்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தால் திகைத்துப் போனேன்: போரிஸ் ஜான்சன் பேச்சு

லண்டன்: லண்டனில் 39 உடல்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தால் திகைத்துப் போனதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். லண்டனின் கிழக்குப் பகுதியில் உள்ள தொழிற்பேட்டையில் லாரி ஒன்றில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட 39 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. உடல்கள் கண்டெடுக்கப்பட்ட லாரி பல்கேரியாவிலிருந்து வேல்ஸ் வழியாக கடந்த சனிக்கிழமையன்று லண்டன் நுழைந்துள்ளது. இந்த லாரியை ஓட்டி வந்த 25 வயதான வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று லண்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறும்போது, இந்த சோகமான சம்பவத்தைக் கேட்டு திகைத்துப் போகிறேன். இது நினைத்துப் பார்க்க முடியாதது. நான் இந்த வழக்கு தொடர்பாக வரும் அனைத்துத் தகவல்களையும் கவனித்துக் கொண்டிருக்கிறேன். போலீஸார் என்ன நடந்து என்பதை நிச்சயம் கண்டுபிடிப்பார்கள் என்றார்.

39 உடல்கள் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஓட்டுநரின் பெயர் ராபின்சன் என்றும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாகவும் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பான விசாரணையை அயர்லாந்து போலீஸார் தொடங்கியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: