கொலைகளின் எண்ணிக்கையை மாற்றிக் கூறி, சட்டமன்றத்திற்கே தவறான தகவல் தந்ததற்காக முதல்வர் பழனிசாமி வருத்தம் தெரிவிக்க வேண்டும் : ஸ்டாலின் அறிக்கை

சென்னை :தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது என சட்டமன்றத்தில் தவறான தகவல் தந்ததற்காக முதலமைச்சர் பழனிசாமி வருத்தம் தெரிவிக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார். சட்டமன்றத்தில் 2017-ல் 1466 கொலைகள் நடந்ததாக முதல்வர் கூறியதாகவும், ஆனால் தமிழகத்தில் மட்டும் 1613 கொலைகள் நடந்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள 2017ம் ஆண்டிற்கான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதையும் ஸ்டாலின் சுட்டிக் காட்டினார். கொலைகளின் எண்ணிக்கையை மாற்றிக் கூறியதில் இருந்து சட்டமன்றத்திற்கே முதல்வர் உண்மையை மறைத்து தவறான தகவல்களை தந்துள்ளார் என்று குற்றம் சாட்டிய ஸ்டாலின், அதிமுக ஆட்சிக்கு கொலை போன்ற கொடிய குற்றங்களை தடுக்கும் ஆற்றல் துளியும் இல்லை என்பதை முதல்வர் உணர வேண்டும் என்றும் அறிக்கையில் கூறியுள்ளார்.

மேலும் ஸ்டாலின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளாவது,காவல் நிலையங்கள் அந்தந்த இடங்களில் உள்ள அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகளின் கட்டுப்பாட்டில் இயக்குவது தரங்கெட்ட ஆட்சிக்கு அடையாளம். கூலிப்படை அட்டகாசம், எங்கு பார்த்தாலும் கொலைகள் என்ற பயங்கரமான நிலை, அதிமுக ஆட்சியால் தமிழகத்திற்கு அவப்பெயர். கொலையில் மட்டுமல்ல, இந்திய தண்டனைச் சட்டப்படியான குற்றத்தில் இந்தியாவில் கொலைகள் நடந்த மாநிலங்களின் பட்டியலில் 6-வது மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என ஆவண காப்பகம் தகவல் அளித்துள்ளது. சிறப்பு மற்றும் உள்ளூர் சட்டங்களின் அடிப்படையிலான குற்றங்களில் இந்தியாவில் தமிழகம் 4வது மாநிலம் என ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. சட்டவிரோதமாக கூடியதாக போடப்பட்ட வழக்குகளிலும், கலவரங்களிலும் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியால் தமிழகத்திற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள மிகப்பெரிய அவமானம் மட்டுமல்ல. அழிக்க முடியாத கறையாகும். குற்ற ஆவண காப்பக அறிக்கைக்கு பிறகாவது அதிமுகவினரின் தலையீடு இன்றி போலீஸ் சுதந்திரமாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். கொலைக் குற்றங்களின் அச்சத்தில் இருந்து மக்களை மீட்க வேண்டும்என்றும் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

Related Stories: