தஞ்சை பெரிய கோயில் திருவிழாவிற்காக 1,200 கிலோ தென்னை நாரில் மெகா சைஸ் தேர் வடக்கயிறு

சிங்கம்புணரி: தஞ்சை பெரிய கோயில் திருவிழாவிற்காக மெகா சைஸ் தேர் வடக்கயிறு தயாராகி வருகிறது.தென்னை நார் கயிறுகள் தயாரிக்கும் தொழிலுக்கு சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மிகவும் பிரசித்திப்பெற்றது. இங்கு தஞ்சை பெரிய கோயில் திருவிழாவிற்காக கும்பகோணம் பகுதியிலுள்ள டிரஸ்ட்டில் இருந்து மெகா சைஸ் தேர்  வடக்கயிறு செய்ய ஆர்டர் கொடுத்துள்ளனர். 30 இன்ச் சுற்றளவும் 300 அடி நீளமும் கொண்ட இந்த மெகா சைஸ் வடக்கயிறு தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக 50 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆயிரத்து 200 கிலோ தென்னை  நாரை கொண்டு, இந்த தேர்வடக் கயிறு தயாரிக்கப்படுகிறது.

கயிறு தயாரிப்பாளர் பிச்சை கூறுகையில், ‘‘முன்பெல்லாம் தேர் இழுக்க தென்னை நார் வடக்கயிறுகளை பயன்படுத்தி வந்தனர். தற்போது ஒரு சில இடங்களில் கயிறுகளுக்கு பதிலாக இரும்புச் சங்கிலிகளை பயன்படுத்தி வருகின்றனர்.  பெரும்பாலான தேர்களின் சக்கரங்கள் இரும்பாக உள்ளதால் தேர் வேகமாக உருளும். எனவே தேர் இழுக்க இரும்பு சங்கிலியை விட வடக்கயிறுகளே சிறந்தவை. பெரிய வடக்கயிறுகள் கொண்டு தேரை இழுப்பதால் வேகம் கட்டுக்குள் இருக்கும்.  ஆனால் இரும்பு சங்கிலியை கொண்டு இழுப்பதால் தேரின் வேகம் அதிகமாக இருக்கும். இதனால் தேரோட்ட வடக்கயிறுகள் மீண்டும் புழக்கத்தில் வர தொடங்கியுள்ளன’’ என்றார்.

Related Stories: