மத்திய மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி...தமிழகத்தில் அடுத்த 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை: மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, இந்த தாழ்வு பகுதி அடுத்து வரும் 24 மணி நேரத்தில் வலுப்பெற்று மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து செல்லும் என தெரிவித்துள்ளார். அதேபோல, அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து நிலவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. ஒரு சில இடங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பாம்பன் மற்றும் மண்டபத்தில் 18 செ.மீ  மழை பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அடுத்த 2 நாட்கள் கனமழை:

அடுத்து வரும் இரு தினங்களை பொறுத்தவரையில், தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை மைய இயக்குனர் தெரிவித்துள்ளார். நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி ஆகிய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் உள்ள மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளார். இதையடுத்து, சென்னை, விழுப்புரம், கடலூர், புதுவை மற்றும் டெல்டா மாவட்டங்களான அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்து வரும் இரு தினங்களுக்கு மழை தொடரும் எனக் கூறினார்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் இன்றும் நாளையும் (22, 23 ஆகிய தேதிகளில்) செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories: