முத்துபேட்டை அருகே உதயமார்த்தாண்டபுரத்தில் குண்டும், குழியுமான சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்கும் அவலம்

முத்துப்பேட்டை: உதயமார்த்தாண்டபுரத்தில் குண்டும்,குழியுமான சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் மக்கள் கடும் அவதியுற்று வருகின்றனர்.இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் அவர்களின் அலட்சிய போக்கு கண்டித்து விரைவில் போராட்டம் நடத்த மக்கள் முடிவு செய்துள்ளனர். முடிதிருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் ஊராட்சி என்பது ஒன்றியத்தில் பெரிய ஊராட்சிகளின் ஒன்றாகும். இதில் பல்வேறு சாலைகள் போட்டு சுமார்் 15வருடங்கள் கடந்ததால் அனைத்து சாலைகளும் பள்ளம் படுங்குழியாக காட்சியளிக்கிறது. இதில் சமீபத்தில் போடப்பட்ட சாலைகளும் போதிய தரமில்லாமல் போடப்பட்டதால் சேதமாகியுள்ளன.

உதயமார்த்தாண்டபுரம் பகுதியில் முக்கிய சாலையாக கருதப்படும் உதயை கிழக்காடு சாலை, வடக்கு பள்ளிய மேடுசாலை, நாச்சிக்குளம் பள்ளிவாசல் சாலை, நாச்சிகுளம் அக்கரகார சாலை, நாச்சிக்குளம் அம்மாபள்ளி சாலை, நாச்சிக்குளம் நாடார்தெரு சாலை, நடுத்தெரு சாலைகள், உதயை தட்டாங்குளம் சாலை, உதயை சந்திரிகுளம் சாலை, உதயை தெற்கு தெரு சாலை, நாச்சிகுளம் தச்சர் தெரு சாலைகள் தற்பொழுது மக்கள் பயன்படுத்த முடியாதளவில் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் இந்த சாலையை பயன்படுத்தும் மக்கள் பல்வேறு வகையில் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து இப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற்கு எடுத்து சென்றும் எந்தவித பலனுமில்லை. இந்நிலையில் இந்த பகுதியில் அதிகளவில் மக்கள் பயனாக உள்ள உதயமார்த்தாண்டபுரம் ரயில்வே ஸ்டேசன் எதிர்புறம் உள்ள கீழக்காடு சாலையில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று உள்ளது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளியின் எதிரே உள்ள ரயில்நிலையத்தின் திருவாரூர் - காரைக்குடி அகல ரயில்பாதை பணிகளுக்காக ரயில்வே ஸ்டேசன் வளாகம் மண்நிரவி உயர்த்தி கடந்த ஆண்டு மேம்பாடு செய்யப்பட்டது. இதனால் பள்ளி வழியாக பயனில் உள்ள கீழக்காடு போக்குவரத்துச்சாலை பள்ளமானது. இந்நிலையில் கடந்தாண்டு அப்பகுதியில் பெய்த கனமழைக்கு சாலையை மூழ்கடித்தது.

மேலும் உதயமார்த்தாண்டபுரம் கடைத்தெரு தொடங்கி கிழக்கே செல்லும் கீழக்காடு சாலை முழுவதும் மழைநீர் சேறோடு கலந்து தேங்கி நின்றது. மக்கள் சாலை மறியல் போராட்டம் அறிவித்து ஒன்றாக கூடினர். இதனையடுத்து அப்போதைக்கு சாலையில் தேங்கிய மழைநீரையும் சேறும் சகதியை மட்டும் சரி செய்த ரயில்வே துறை மற்றும் ஊராட்சி நிர்வாகம் இப்பகுதியில் தேங்கும் மழைநீரை நிரந்தரமாக வெளியேற்ற உரிய வடிகால் வசதியை ஏற்படுத்தி தரவில்லை. உதயமார்த்தாண்டபுரம் கடைத்தெரு தொடங்கி கிழக்கே செல்லும் கீழக்காடு சாலை முழுவதும் ஆங்காங்கே மழைநீர் சேறோடு கலந்து தேங்கி சேறும் சகதியுமாக பரவி கிடக்கிறது. இதனால் இப்பகுதியில் செல்ல மாணவர்கள் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும் மாணவர்கள், சிறுவர்கள் இந்த சேறும் சகதிக்குள் நடந்து செல்வது மூலம் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே சாலையில் பரவியுள்ள சகதியை உடனடியாக அகற்றி சாலையை சீரமைக்க வேண்டும்.அதே போல் அப்பகுதியில் நிரந்தரமாக வடிகால் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்று ஊராட்சி நிர்வாகத்தையும், ரயில்வே துறையையும் வேண்டி அப்பகுதி பொதுமக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனாலும் எதுவுமே நடக்கவில்லை இதனால் உதயமார்த்தண்டபுரத்தை சேர்ந்த மக்கள் ஒன்று திரண்டு விரைவில் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன் கூறுகையில், இப்பகுதியில் கீழக்காடு சாலை படுமோசமாக உள்ளது இதுகுறித்து பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் எந்த பலனுமில்லை தற்பொழுது பெய்த மழைக்கு இப்பகுதியில் உள்ள அனைத்து சாலைகளுமே சேதமாகியுள்ளன ஒன்றிய நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து சீரமைக்காவிட்டால் விரைவில் ஒப்பாரியுடன் பாடை எடுத்து சென்று சாலையில் வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

Related Stories: