100 செலுத்தினால் நிலம் தருவதாக கூறி தனியார் நிறுவனம் 75 கோடி மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டரிடம் மனு

நாமக்கல்: நாமக்கல்லில் 100 செலுத்தினால் நிலம் தருவதாக கூறி, தனியார் நிறுவனம் 75  கோடி வரை மோசடி செய்துள்ளதாக கூறி, பாதிக்கப்பட்டவர்கள் திரண்டு வந்து நாமக்கல் கலெக்டரிடம் மனு  அளித்தனர்.நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு, நேற்று பாண்டமங்கலம், பரமத்திவேலூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர். பின்னர், அவர்கள் கலெக்டர் மெகராஜை சந்தித்து புகார் மனு அளித்தனர்.  அதன் விவரம் வருமாறு:மதுரையை தலைமையிடமாக கொண்டு கடந்த 2006ல், ஒரு தனியார் நிறுவனம் தொடங்கப்பட்டது. 49 பங்குதாரர்கள் இந்த நிறுவனத்தில் அங்கத்தினர்களாக இருந்தனர். இந்த நிறுவனத்தில் மாதம் 100 வீதம் செலுத்தும் நபர்களுக்கு 800 சதுர அடி  நிலம் தரப்படும். நிலம் வேண்டாம் என்றால் 12.5 சதவீத வட்டியோடு செலுத்திய பணம் தரப்படும் என அறிவிக்கப்பட்டது.  

கடந்த 2015ல் பங்குதாரர்கள் ஒன்று சேர்ந்து, மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் பொய் புகார் அளித்து,  நிறுவனத்தை மூடி விட்டனர். பணம் செலுத்தியவர்களுக்கு, நிறுவனத்தின் சொத்துக்களை ஏலம் விட்டு பணம் திருப்பி தருவதாக கூறினார்கள். ஆனால், 3 முறை நீதிமன்றம் சொத்துக்களை ஏலம் விட உத்தரவிட்டும், ஏலம் விடவில்லை. நாமக்கல் மாவட்டத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், இந்த நிறுவனத்தில் ₹75 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளனர். இந்த பணத்தை கடந்த  5 ஆண்டாக திருப்பி தராமல், ஏமாற்றி வருகிறார்கள். எனவே, பணத்தை மீட்டு தர நடவடிக்கை  எடுக்கவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக, கலெக்டர் மெகராஜ் உறுதி அளித்ததை தொடர்ந்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Related Stories:

>