முறையான விதிமுறைகளை ஏற்படுத்தும் வரை லிப்ரா டிஜிட்டல் கரன்சியை பேஸ்புக் வெளியிடக் கூடாது: ஜி-7 நாடுகள் அமைப்பு கருத்து

வாஷிங்டன்: ‘முறையான விதிமுறைகள் ஏற்படுத்தும் வரை ‘லிப்ரா’ டிஜிட்டல் கரன்சியை பேஸ்புக் நிறுவனம் வெளியிடக் கூடாது,’ என ஜி-7 நாடுகளின் அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.  பிட்காயின் என்ற டிஜிட்டல் கரன்சி போல், ‘லிப்ரா’ என்ற டிஜிட்டல் கரன்சியை உலகம் முழுவதும் அறிமுகப்படுத்த பேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த கரன்சியை நோட்டுக்கள் வடிவில் பார்க்க முடியாது. டிஜிட்டல் பணமாக ஆன்லைன் மூலமாக மட்டுமே பயன்படுத்த முடியும். சமூக இணைய தளங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை உலகம் முழுவதும் அதிகரித்துள்ளது. எனவே, ‘லிப்ரா’ டிஜிட்டல் கரன்சியின் பயன்பாடு உடனடியாக வெற்றிகரமாகவும், லாபகரமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து நாடுகளின் கரன்சி மதிப்புகளையும் ‘லிப்ரா’ டிஜிட்டல் கரன்சியாக மாற்றி ஆன்லைன் வர்த்தகத்துக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.

Advertising
Advertising

ஆனால், கரன்சி விஷயத்தில் ஒரு ஜனநாயக நாட்டுக்கு உள்ள இறையாண்மை மற்றும் அதிகாரம், ஒரு தனியார் நிறுவனத்துக்கு இருக்கக் கூடாது என பல நாடுகள் கருத்து தெரிவித்துள்ளன. ஜி-7 நாடுகளின் சார்பில் பிரான்ஸ் நாட்டின் பொருளாதாரத் துறை அமைச்சர் ப்ரூனோ லீ மேரி விடுத்துள்ள அறிக்கையில், ‘லிப்ரா போன்ற டிஜிட்டல் கரன்சிகள், பண மதிப்பின் மீது இறையாண்மையுள்ள நாடுகள் வைத்திருக்கும் கட்டுப்பாட்டை அழித்து விட வாய்ப்புள்ளது. இது ஜனநாயகம் சம்பந்தப்பட்ட விஷயம், வெறும் பொருளாதார கேள்வி மட்டும் அல்ல. பேஸ்புக் வெளியிடும் ‘லிப்ரா’ கரன்சி, சமூக இணையதளங்கள் மூலமாக உலகம் முழுவதும் விரைவில் சென்றடையும். உலகம் முழுவதும் நிதி மோசடிகள் நடப்பதற்கும், தீவிரவாத அமைப்புகளுக்கு பணம் செலுத்தவதற்கும் லிப்ரா டிஜிட்டல் கரன்சிகள் பயன்படுத்தப்படும்.

இது போன்ற பிரச்னைகளை எதிர்கொள்ள சட்ட ரீதியான விதிமுறைகள் வகுக்கப்படும் வரை லிப்ரா டிஜிட்டல் கரன்சியை பேஸ்புக் நிறுவனம் வெளியிடக் கூடாது,’ என கூறியுள்ளார்.   இது குறித்து பேஸ்புக் லிப்ரா கரன்சி தலைவர் டேவிட் மார்க்ஸ் வாஷிங்டனில் அளித்த பேட்டியில், ‘‘லீ மேரி எழுப்பியுள்ள சட்டரீதியான பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்,’’ என்றார். லிப்ரா கரன்சியின் செயல்பாட்டை மேற்பார்வையிட ஜெனிவாவில் கடந்த திங்கள் கிழமை தொடங்கப்பட்டுள்ள ‘தி லிப்ரா அசோசியேஷன் விடுத்துள்ள செய்தியில், ‘நிதி கொள்கையில் நாடுகளின் இறையாண்மையை மதிக்கும் வகையில் லிப்ரா டிஜிட்டல் கரன்சி வடிவமைக்கப்பட்டு உள்ளது,’ என தெரிவித்துள்ளது.

Related Stories: