நடப்பாண்டில் 5வது முறையாக முழுகொள்ளவை எட்டியது பில்லூர் அணை: பாதுகாப்பு கருதி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கோவை: கோவை மாவட்டம் பில்லூர் அணை நடப்பாண்டில் 5வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது. பாதுகாப்பு கருதி வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுவதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையின் தீவிரத்தால் கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. பில்லூர் அணை அமைந்துள்ள மேற்குத்தொடர்ச்சி மலை காடுகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதை தொடர்ந்து மொத்த நீர்த்தேக்க உயரமான 100 அடியில் 98 அடிக்கு நீர் நிரம்பியதால் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி நீர் முழுவதும் அப்படியே நான்கு மதகுகள் வழியே வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பில்லூர் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், நீலகிரியில் மழை நீடித்து வருவதால் நீர்வரத்து அதிகரிக்கும் போது நீர் வெளியேற்றமும் அதிகரிக்கப்படும். எனவே வருவாய்த்துறை சார்பில் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கரையோர மக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, துணி துவைக்கவோ, மீன் பிடிக்கவோ கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் இணைந்து கரையோரமுள்ள குடியிருப்புகளுக்கு சென்று பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.

பில்லூர் அணை இந்த ஆண்டு 5வது முறையாக நிரம்பியுள்ளதால் அதன் உபரி நீர் பவானி ஆற்றின் வழியே பவானி சாகர் அணைக்கு சென்றடைகிறது. இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. பவானிசாகர் செல்லும் வழியில் உள்ள லிங்காபுரம், காந்தை ஆற்றின் குறுக்கே உள்ள உயர்மட்ட பாலம் முழ்கியுள்ளதால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் பரிசலில்  பயணித்து வருகின்றனர். 

Related Stories: