தமிழகத்தில் புதிதாக 5,125 பெட்ரோல் பங்க்குகள் தொடங்க தடை விதிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் கிளை

மதுரை: தமிழகத்தில் புதிதாக 5125 பெட்ரோல் பங்க்குகள் தொடங்க தடை விதிக்கக் கோரிய மனுவை  உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. பெட்ரோல் பங்க் அமைக்க ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த தடையையும் உயர்நீதிமன்ற கிளை நீக்கியது. மேலும் இதனை பொதுநல வழக்காக கருத முடியாது என்றும் கூறியுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை சேர்ந்த வெங்கிடுசாமி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் தமிழகத்தில் புதிதாக  5,125 பெட்ரோல் பங்குகள் அமைப்பது தொடர்பான டெண்டர் அறிவிப்புக்கு தடை விதிக்க கோரியிருந்தார்.  இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஏற்கனவே, டெண்டர் அறிவிப்புக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் மனு மீதான விசாரணை நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு கடந்த மார்ச் மாதம் மீண்டும் நடந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், “பெட்ரோல் நிலையங்களை அதிகரித்திருப்பதற்கான டெண்டரில் பல்வேறு விதிகள் மீறப்பட்டிருப்பதாகவும், உடனடியாக பெட்ரோல் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்” என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனங்கள் தரப்பில், “முறையாகவே டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே, நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையை நீக்க வேண்டும்” என கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், நியாயமான காரணம் எதுவும் காணவில்லை எனக்கூறி, இடைக்கால தடையை நீக்க மறுப்பு தெரிவித்திருந்தனர்.  இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அப்போது, பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு சாதகமாக விற்பனை செய்பவர்கள் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என நீதிபதிகள் தெரிவித்தனர். எனவே, இதனை பொதுநல மனுவாக கருத முடியாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Related Stories: