சேலம் அருகே அரசு மகளிர் பள்ளி வகுப்பறையில் பீர் பாட்டிலுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்

* ஆசிரியர் கண்டித்ததால் மாணவி தற்கொலை

* போலீசுக்கு தெரிவிக்காமல் சடலம் எரிப்பு

சேலம்: சேலம் அருகே அரசுப்பள்ளி வகுப்பறையில் பீர் பாட்டிலுடன் பிளஸ் 2 மாணவிகள் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர்கள் இதை கண்டித்ததால், ஒரு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியது. சேலம் மாவட்டம் இடைப்பாடி கல்வி மாவட்டத்திற்குட்பட்ட நங்கவள்ளி பகுதியில் உள்ள ஒரு அரசு மகளிர் பள்ளியில் 1,500க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் காலை அந்த  பள்ளியில் அப்துல்கலாம்  பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. தொடர்ந்து மாணவிகள் அனைவரும் வகுப்பறைக்கு சென்றனர். பிளஸ் 2 படித்து வரும் மாணவி ஒருவருக்கும் நேற்று முன்தினம் பிறந்தநாள் என கூறப்படுகிறது.  இதனையடுத்து ஒரு வகுப்பறையில் மாணவிகள் 5 பேர் ஒன்று கூடி, கேக் வெட்டியும், இனிப்பு வழங்கியும் பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர்.

இந்நிலையில் அந்த மாணவிகள் கையில் பீர் மதுபாட்டில்களை வைத்திருந்துள்ளனர். இதனை செல்போனில் வீடியோவாகவும், செல்பி போட்டோக்களாகவும் பதிவு செய்துள்ளனர். அப்போது திடீரென வகுப்பறைக்கு வந்த ஆசிரியர் ஒருவர்,  மாணவிகள் மதுபாட்டில்களுடன் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.  தொடர்ந்து இதுகுறித்து தலைமை ஆசிரியருக்கு அவர் தகவல் தெரிவித்தார். இதன்பேரில் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளும், மாணவிகளின் பெற்றோரும் பள்ளிக்கு  வரவழைக்கப்பட்டனர். பின்னர், அவர்கள் முன்னிலையில் மாணவிகளுக்கு எச்சரிக்கை விடுத்ததுடன், அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இதனிடையே பெற்றோருடன் வீட்டிற்கு சென்ற மாணவி ஒருவர், திடீரென தூக்கிட்டு தற்கொலை  செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், இதுகுறித்து போலீசார் மற்றும் உறவினர்கள் என  யாரிடமும் தெரிவிக்காமல், மாணவியின் சடலத்தை இரவோடு இரவாக தகனம் செய்தனர்.

இந்த தகவல் நேற்று காலை வெளியே கசிய ஆரம்பித்தது. இது கல்வித்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மாவட்ட சிஇஓ கணேஷ்மூர்த்தி கூறுகையில், “சம்பந்தப்பட்ட மாணவிகளை தனியாக ஒரு அறையில் வைத்து,  அவர்களின் பெற்றோர் முன்னிலையில் அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளனர். அதன்பின்னர் வீட்டிற்கு சென்று மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும்  மாணவிகளிடம் இடைப்பாடி கல்வி அலுவலர், விசாரணை நடத்துவார். அதனை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,” என்றார்.

Related Stories: