சென்னை உள்பட 5 மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

தூத்துக்குடி:  நாங்குநேரி தேர்தல்  பிரசாரத்திற்கு வந்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நேற்று திடீர் ஆய்வு நடத்தினார்.  பின்னர் அவர் அளித்த பேட்டி: எல்லா அரசு மருத்துவமனையிலும் காய்ச்சலுக்கென பிரத்யேக  வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 47 பேர்  காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 2  பேருக்கு மட்டும் டெங்கு  அறிகுறிகள் இருந்தன.  பொதுவாக காய்ச்சலுக்காக  மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களில் 10 சதவீதம் பேருக்கு டெங்கு  பாசிட்டிவ் இருக்கிறது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,  வேலூர், தர்மபுரி ஆகிய 5 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு  உள்ளது.

அதை தடுக்க  தேவையான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறோம். இதற்காக  முதல்வர் தலைமையிலும், தலைமைச் செயலாளர் தலைமையிலும் இரு முறை ஆய்வுக்  கூட்டங்கள் நடத்தப்பட்டன. மேலும் வாரம்  இருமுறை ‘வீடியோ கான்பரசிங்’ மூலம்  ஆலோசனை நடத்தி போதுமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சுகாதாரத்துறை, பள்ளிக்கல்வித்துறை, சமூகநலத்துறை  ஆகிய துறைகளை ஒருங்கிணைத்து டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை  எடுத்து  வருகிறோம்.பொதுவாக காய்ச்சல் வந்தால் பொதுமக்கள் அனைத்து வசதிகளும்  உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு வரும்படி அறிவுறுத்தியுள்ளோம். எந்தக்  காய்ச்சலாக இருந்தாலும் உடனே அரசு மருத்துவமனைக்கு வந்தால் 100 சதவீத  உயிரிழப்பு  இல்லாமல் நல்ல நிலையில் பொதுமக்கள் வீட்டிற்கு திரும்பிச்  செல்கின்றனர். மழை தொடங்கியுள்ளதால் தேங்கி நிற்கும் தண்ணீரால் டிசம்பர்  வரை எங்களுக்கு சவாலான நிலை தான். இருப்பினும் அதை  திறம்பட சமாளிக்க  அனைத்து  ஏற்பாடுகளும் அரசு சார்பில் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: