விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதியில் திமுக கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு : கருத்துக்கணிப்பில் தகவல்

சென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்று கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது. பண்பாடு மக்கள் தொடர்பகம் மற்றும் லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் இணைந்து நடத்தும் ‘மக்களை ஆய்வது மக்களுக்காகவே’ என்ற நோக்கத்துடன் ‘தமிழக மக்களை மையப்படுத்தி பல்வேறு பிரச்னைகள், பரப்புரைகள், பயிலரங்குகளை பண்பாடு மக்கள் தொடர்பகம் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, வருகிற 21ம் தேதி தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி மாநிலம் காமராஜ் நகர் தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தல் குறித்தும் ஆய்வுகள் நடத்தி அதன் முடிவுகளை நேற்று வெளியிட்டது. இதுகுறித்து முன்னாள் லயோலா கல்லூரி மாணவரும், பண்பாடு மக்கள் தொடர்பகம் ஒருங்கிணைப்பாளருமான சி.திருநாவுக்கரசு சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறும் 3 இடைத்தேர்தலில் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்று 2,301 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. இதில் ஆண்கள் 54 சதவீதம், பெண்கள் 46 சதவீதம் ஆகும். கட்சி சார்பற்றவர்கள் 60 சதவீதம் பேரிடமும், கட்சி சார்பானவர்கள் 40 சதவீதம் பேரிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது. மேலும் தொழில் முனைவோர், அரசு ஊழியர்கள், விவசாயிகள், மாணவர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் போன்ற அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கியதாக இந்த ஆய்வு அமைந்துள்ளது. அதன்படி இந்த சட்டமன்ற இடைத்தேர்தல் தமிழக அரசியல் களத்தில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்று கேட்டபோது, 33.1 சதவீதம் பேர் ஆம் என்றும், 41.9 சதவீதம் பேர் இல்லை என்றும், 25 சதவீதம் கருத்து இல்லை என்றும் கூறினர். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் நிர்வாகம் மற்றும் ஆளுமைத்திறன் அதிகரித்திருப்பதாக 46.5 சதவீதம் பேரும், இல்லை என்று 38.2 சதவீதம் பேரும், 15.3 சதவீதம் பேர் கருத்து இல்லை என்றும் கூறியுள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டு பயணம் அவரின் அரசியல் செல்வாக்கை அதிகரிக்குமா என்ற கேள்விக்கு, ஆம் என்று 41.8 சதவீதம் பேரும், இல்லை என்று 48.5 சதவீதம் பேரும், கருத்து இல்லை என்று 9.7 சதவீதம் பேரும் பதில் அளித்துள்ளனர்.

தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசின் எஞ்சிய காலம் தமிழக மக்களுக்கு பயனுள்ளதாக அமையுமா என்ற கேள்விக்கு, ஆம் என்று 13.8 சதவீதம் பேரும், இல்லை என்று 82.6 சதவீதம் பேரும், கருத்து இல்லை என்று 3.6 சதவீதம் பேரும் பதில் அளித்துள்ளனர்.முதல்வர் எடப்பாடியின் அரசின் நிர்வாக அமைப்பின் அணுகுமுறை தொடரக்கூடாது என்று 80.6 சதவீதம் பேரும், தொடரலாம் என்று 15 சதவீதம் பேரும், கருத்து சொல்ல விரும்பவில்லை என்று 4.4 சதவீதம் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழக அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் முதல்வர் எடப்பாடியின் முழு கட்டுப்பாட்டில் இருப்பதாக 73.1 சதவீதம் பேரும், அதிமுக அமைச்சரவை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று 78.2 சதவீதம் பேரும், சசிகலா விடுதலைக்கு பின் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து செயல்பட வாய்ப்பு உள்ளதாக 80.2 சதவீதம் பேரும், தமிழகத்தில் அதிமுக கட்சி மற்றும் ஆட்சி அதிகாரத்தில் பாஜவின் தலையீடு உள்ளதாக 93.7 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

பாஜகவின் தமிழ் பாரம்பரியம் மீதான சமீபகால அக்கறை அரசியல் உள்நோக்கம் கொண்டதாக 90.6 சதவீதம் பேரும், எதார்த்தமானது 3 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்து இடைத்தேர்தலில் பங்கேற்றால் 18.6 சதவீதம் மட்டுமே ஆதரவு இருந்திருக்கும் என்றும், தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் ஆக்கப்பூர்வமாக செயல்படுகிறார் என்று 63 சதவீதம் பேரும், கலைஞருக்கு பிறகு திமுகவின் தலைவராக ஸ்டாலின் செயல்பாடு நன்றாக உள்ளதாக 87.4 சதவீதம் பேரும், ஸ்டாலின் முதல்வரானால் அரசு பணிகளில் வடமாநிலத்தவர்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவார் என்று 85.3 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் நடைபெறும் இடைத்தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவுக்கு 43.60 சதவீதம் பேரும், அதிமுகவுக்கு 43.20 சதவீதம் பேரும், நாம் தமிழர் கட்சிக்கு 4.10 சதவீதம் பேரும், பிற கட்சிகளுக்கு 9.10 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். நாங்குநேரி சட்டமன்ற இடைத்தர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு 40.90 சதவீதம் பேரும், அதிமுகவுக்கு 37.60 சதவீதம் பேரும், நாம் தமிழர் கட்சிக்கு 8.30 சதவீதம் பேரும், பிற கட்சிகளுக்கு 13.20 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். புதுச்சேரி மாநிலம் காமராஜ் நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு 44.60 சதவீதம் பேரும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 39.10 சதவீதம் பேரும், நாம் தமிழர் கட்சிக்கு 5.30 சதவீதம் பேரும், பிற கட்சிகளுக்கு 11 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: