தேர்தல் பரப்புரையில் போது கமல்ஹாசன் கருத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு: நவ. 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம்

டெல்லி: சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. முன்னதாக சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்ற அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அங்கு பிரசாரம் மேற்கொண்டார். அப்போது மக்களிடையே பேசிய அவர், நமது நாட்டு தேசியக்கொடியில் உள்ள மூன்று நிறங்களும் பல்வேறு நம்பிக்கைகளை குறிக்கின்றன. இந்த சமநிலையால் பெருமைப்படும் இந்தியர்களில் நானும் ஒருவனாக இருக்கிறேன். இந்த மூன்று நிறங்களும் சரியாக இருக்க வேண்டும். அதனால் இங்குள்ள மக்கள் அனைவரும் ஒற்றுமையோடு வாழ வேண்டும் என்பது தான் நல்ல இந்தியர்களின் விருப்பமாக இருக்க வேண்டும்.

மேலும் இந்த இடம் இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் பகுதி என்பதால் நான் இதை சொல்ல விரும்பவில்லை. ஆனால் மகாத்மா காந்தியின் சிலைக்கு முன்னால் நின்று இதை சொல்கிறேன். ஏனெனில் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என பேசினார். இவரது கருத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே டெல்லியில் உள்ள இந்து சேனா அமைப்பு சார்பில், கமல் மீது வழக்கு தொடரப்பட்டது. அதில், தேர்தல் விதிமுறைகளுக்கு எதிராக மதத்தை வைத்து ஆதாயம் தேடும் நோக்கில் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்துள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த வழக்கு இன்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு தொடர்பான ஆதாரங்களை மனுதாரர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதையடுத்து இந்த வழக்கை நவம்பர் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories: