இந்தியாவில் பி.ஹெச்.டி பட்டம் பெற்றவர்களில் பிற மாநிலங்களை விட தமிழகத்திற்குத் தான் முதலிடமாம்!

சென்னை : அதிக அளவில் முனைவர் பட்டம் பெற்ற மாணவ, மாணவர்களை உருவாக்குவதில் பிற இந்திய மாநிலங்கள் அனைத்தையும் விட தமிழ்நாடு முன்னிலையில் இருப்பதாக மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2018-2019-ம் கல்வியாண்டில் நாட்டிலேயே அதிகமாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த 5,844 பேர், Ph.D எனப்படும் முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளனர் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் நடத்திய உயர்கல்வித்துறை கணக்கெடுப்பில் தெரியவந்திருக்கிறது.

*தமிழ்நாட்டில் ஆண்களைவிட, பெண்களே அதிகளவில் முனைவர் பட்டங்களை பெற்றுள்ளனர்.

*தமிழ்நாட்டைச் சேர்ந்த 5,844 பேரில் 2,976 பெண்களும், 2,868 ஆண்களும் முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளனர்.

*தமிழ்நாட்டைத் தொடர்ந்து அடுத்ததாக  கர்நாடகா  5,020 முனைவர் பட்ட மாணவர்களையும், உத்தரபிரதேசம்  3,996 முனைவர் பட்ட மாணவர்களையும் உருவாக்கித் தந்துள்ளனர்.

*இதற்கு அடுத்த இடங்களை அசாம் மாநிலமும், ஆந்திராவும் பிடித்துள்ளன.அசாம்  3,676 முனைவர் பட்ட மாணவர்களையும், ஆந்திரா 2,615 முனைவர் பட்ட மாணவர்களையும் உருவாக்கித் தந்துள்ளனர்.

இதனிடையே நாட்டிலேயே அதிகமாக தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 49 விழுக்காடாக உள்ளது. தமிழ்நாடு உயர்கல்வித்துறை சார்பாக Ph.D. பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் உதவித்தொகை 36,000 ரூபாயில் இருந்து, 60,000 ரூபாயாக உயர்த்தப்பட்டதும், Ph.D., ஆய்வுக்கட்டுரைகளைக் கண்காணிக்க தனிக்குழுவை அமைத்து Ph.D., படிப்பின் தரத்தை அதிகப்படுத்தியதும், Ph.D., யில் குறுகிய காலத்தில் அதிக மாணவர்கள் தேர்ச்சி பெறுவதற்குக் காரணம் என்று மாநில உயர்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: