திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் காட்சி பொருளான சுத்திகரிப்பு குடிநீர் நிலையம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு குடிநீர் குழாய் பயன்பாட்டிற்கு வராமல் காட்சி பொருளாக இருந்து வருவதால், தண்ணீர் குடிக்க செல்லும் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பொதுமக்கள் மற்றும் கிரிவலம் வரும் பக்தர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் போதிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நெடுஞ்சாலை துறை சார்பில் கிரிவலம் பாதையில் பக்தர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, காஞ்சி சாலையில் அபயமண்டபம் அருகே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய் மையம் அமைக்கப்பட்டுள்ளது. சுத்திகரிப்பு குடிநீர் மையம் அமைக்கப்பட்டு பல மாதங்களாகியும் இதுவரை பயன்பாட்டிற்கு வராமல் காட்சி பொருளாகவே இருந்து வருகிறது.

நேற்று பவுர்ணமி தினத்தையொட்டி கிரிவலம் வந்த பகதர்கள் தண்ணீர் தாகத்தை போக்க சுத்திகரிப்பு குடிநீர் நிலையத்தில் உள்ள குழாய்களுக்கு சென்று தண்ணீர் குடிக்க சென்ற பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

கிரிவலப்பாதையில் பணிகள் நிறைவடைந்தும், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவராமல் காட்சி பொருளாகவே இருந்து வருவது பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. எனவே சுத்திகரிப்பு குடிநீர் நிலையத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட வேண்டும் என பொதுமக்கள், பக்தர்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.

Related Stories: