விளையாட்டுக்கு ஒதுக்கும் நிதியில் முறைகேடு தடுக்க ஆன்லைனில் பரிசுத்தொகை திட்டம் மீண்டும் காசோலைக்கே மாறியது: பின்னோக்கி செல்வதால் வீரர்கள் அதிருப்தி

வேலூர்: தமிழகத்தில் விளையாட்டுக்கு ஒதுக்கும் நிதியில் முறைகேடுகளை தடுக்க ஆன்லைனில் பரிசு தொகை வழங்கும் திட்டம் மீண்டும் காசோலைக்கே மாறியது.  தமிழ்நாடு அரசு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் மாவட்டம் தோறும் விளையாட்டு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, மாதாந்திர விளையாட்டு போட்டிகள், முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் கபடி, வாலிபால், கிரிக்கெட், டென்னிஸ், தடகளம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் என்று நூற்றுக்கணக்கானோர் பங்கேற்கின்றனர். இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு அரசு சார்பில் ஒதுக்கீடு  செய்யப்படும் நிதியைக்கொண்டு, பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. இது அவர்களுக்கு உரிய முறையில் சேருவதில்லை. பல்வேறு முறைகேடுகள் நடக்கிறது. மாவட்ட விளையாட்டு அலுவலர்கள் காசோலை வழங்க லஞ்சம் கேட்பதாக  குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இதையடுத்து தமிழகம் முழுவதும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுத்தொகை வழங்குவது, அவர்களது வங்கி கணக்கு விவரங்களை பெற்று ஆன்லைனில் மணி டிரான்ஸ்பர் செய்யும் திட்டம் மூலம்  நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த மாற்றத்தை அனைவரும் வரவேற்றனர். இதனால் வெற்றி பெறும் போட்டியாளர்கள் பரிசுத்தொகை பெறுவதற்கு மாவட்ட விளையாட்டு அலுவலக வாசலில் காத்திருக்க வேண்டிய நிலைக்கு முற்றுப்புள்ளி  வைக்கப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் பரிசுத்தொகையை காசோலையாக வழங்கும் முறை பின்பற்றப்படுகிறது. இப்படி விளையாட்டுத்துறையில் பின்னோக்கி செல்லும் நிலையால் உரிய முறையில் பரிசுத்தொகை வழங்கப்படுமா? என்பதில் மீண்டும்  சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து விளையாட்டு வீரர்கள் கூறியதாவது: விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முன்பு ஆன்லைனில் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. அதன்படி கடந்த ஜனவரியில் நடந்த முதல்வர் கோப்பைக்கான போட்டிகளிலும் வெற்றி  பெற்றவர்களின் வங்கி கணக்கு விவரங்கள் பெற்றுக்கொண்டனர்.

ஆனால் பல மாதங்கள் ஆகியும் பரிசுத்தொகை வழங்கப்படவில்லை. நாங்களும், பரிசுத்தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று காத்திருந்தோம். ஆனால் தற்போது வங்கி கணக்கில் செலுத்தப்படும் முறை நிறுத்தப்பட்டுள்ளது.  காசோலைதான் கிடைக்கும். நேரில் வந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்று விளையாட்டுத்துறை சார்பில் தெரிவிக்கப்படுகிறது.  இதில் ஒரு சில நேர்மையான அதிகாரிகள் காசோலையை உடனே வழங்கி விடுகின்றனர். சில அதிகாரிகள் காசோைல வழங்க பணம் கேட்கின்றனர். இந்த நடைமுறை முறைகேடுகளை ஊக்குவிக்க வழிவகுக்கும், எனவே பரிசுத்தொகையை  மீண்டும் ஆன்லைனில் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர். 

Related Stories: