சர்வதேச நிதி கண்காணிப்பு அமைப்பின் கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு நிதி அளிப்பதை தடை செய்ய இந்தியா வலியுறுத்தல்

பாரீஸ்: FATF எனும் சர்வதேச நிதி கண்காணிப்பு அமைப்பின் கூட்டம் பாரீசில் 13ம் தேதி தொடங்கி 18ம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில் பாகிஸ்தானை தீவிரவாத ஆதரவு காரணமாக பிளாக் அவுட் செய்ய வேண்டும் என்று இந்தியா வலியுறுத்த உள்ளது. ஏற்கனவே கிரே லிஸ்ட் எனப்படும் கண்காணிப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் பிளாக் அவுட் செய்யப்பட்டால் அதற்கு சர்வதேச அளவிலான நிதி உதவிகள் நிறுத்தப்படும். பாகிஸ்தானின் வளர்ச்சிக்காக வழங்கப்படும் நிதியில் கணிசமான பகுதி தீவிரவாதிகளுக்கு வழங்கப்படுவதற்கான ஆதாரங்களை இந்தியா திரட்டி புகார் அளித்துள்ளது.

நாளை தொடங்கும் கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா முறையீடு செய்யும்போது, சீனா முட்டுக்கட்டை போடக்கூடும் என்று கருதப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில் இன்று சீன அதிபர் ஜின்பிங்குடன் மோடி நடத்த உள்ள இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தையில் தீவிரவாதம், தீவிரவாதத்திற்கான நிதி ஆதாரங்களை ஒடுக்குதல் போன்ற பிரச்சினைகள் கூடுதல் முக்கியத்துவம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வர்த்தக ரீதியாக இந்தியா-சீனா இடையிலான கருத்து வேறுபாடுகள், எல்லையில் அமைதி காப்பது உள்ளிட்ட பிரச்சினைகளும் விவாதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே சீன அதிபர் ஜின்பிங்கின் வருகையை ஒட்டி சீனாவின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று இ விசா சட்டத்தை இந்தியா தளர்த்தியுள்ளது. இந்தியாவுக்கு வரும் சீனர்களுக்கு 5 ஆண்டு இணைய வழி விசா வழங்குவதில் இருந்த கெடுபிடிகள் தளர்த்தப்பட்டுள்ளன. 5 ஆண்டுக்கான பன்முக விசாவுக்கான கட்டணம் 80 டாலராக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் 60 நாட்களுக்கு மட்டுமே ஒற்றைச் சாளர இ விசா சீனர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.ஆண்டுதோறும் சீனாவில் இருந்து சுமார் இரண்டரை லட்சம் சுற்றுலாப் பயணிகள் இந்தியாவுக்கு வருகிறார்கள்.

Related Stories: