இந்தியாவும் சீனாவும் சர்வதேச விவகாரங்கள் குறித்து கூட்டாகப் பேசினால், உலகம் உற்று கேட்கும் : மோடி - ஜின்பிங் குறித்து சீன ஊடகங்கள் கருத்து

பெய்ஜிங் : சென்னை மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஸீ ஜின்பிங் இடையிலான சந்திப்பு இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்தும் என சீன ஊடகங்கள் கணித்துள்ளன. சீனாவின் முக்கிய ஊடகங்களிலும் பத்திரிக்கைகளிலும் மோடி - ஸீ ஜின்பிங் சந்திப்பு குறித்த தகவல்களும் கட்டுரைகளும் அதிக எண்ணிக்கையில் இடம்பெற்றுள்ளன. அதிகாரபூர்வமற்ற இந்த சந்திப்பு பொதுவாக இரு நாட்டு தலைவர்களுக்கும் எந்தவித பிரச்சனைகளும் இல்லாமல் சுதந்திரமாக கலந்துரையாடுவதற்கான சூழலை அமைத்து தரும் என்று தெரிவித்துள்ளனர்.

மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள மோடி, ஜின்பிங் சந்திப்பும் இரு தரப்பு உறவுகளையும் மேம்படுத்தும் என்றும் இரு தரப்பு உறவுகள் மற்றும் நம்பிக்கையை வளர்ப்பதற்கு உதவும் என்று சீன பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

மத்திய கிழக்கு சீனாவில் உள்ள வூகனில் நடைபெற்ற சந்திப்பு இரு நாட்டு உறவுகளில் புதிய தொடக்க புள்ளியாக அமைந்தது போல சென்னையில் நடைபெற உள்ள மோடி, ஜின்பிங் சந்திப்பு இரு தரப்பு உறவை மேலும் வலுப்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே சீனாவின் குளோபல் டைம்ஸ் ஊடகம் எழுதியுள்ளதாவது,  பெய்ஜிங்கும் புதுடெல்லியும் சர்வதேச மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்து கூட்டாகப் பேசினால், உலகம் உற்று கேட்கும் என்றும் இரு நாடுகளும் கைகோர்த்து பலவற்றை செய்யலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.  இந்த சந்திப்புக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வரும் ஊடகங்கள், இந்த நிகழ்வு தொடர்பான செய்திகளை சேகரிப்பதற்காக ஏராளமான செய்தியாளர்களை மாமல்லபுரத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Related Stories: