செங்கோட்டை, தென்காசியில் மீண்டும் மூட்டை மூட்டையாக கேரள மருத்துவ கழிவுகள் வீச்சு

செங்கோட்டை : செங்கோட்டை, தென்காசியில் மூட்டை மூட்டையாக மீண்டும் கேரள மருத்துவ கழிவுகள் மற்றும் இறைச்சி கழிவுகள் வீசப்பட்டு வருகின்றன. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயமும் நிலவுகிறது. தமிழக - கேரள எல்லை பகுதியான நெல்லை மாவட்டம் புளியரை சோதனை சாவடி வழியாக கேரள மாநிலத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான லாரிகளில் சிமென்ட், பால், காய்கறி, பழங்கள், பூ போன்ற பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன.

Advertising
Advertising

இந்த லாரிகள், அங்கு பொருட்களை இறக்கிவிட்டு திரும்பும்போது கேரளாவில் இருந்து கழிவுகளை ஏற்றி வந்து தமிழகத்தின் கிராமப்புறங்களில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத சாலையோரங்களிலும், நீர்நிலைகளிலும் கொட்டிச் செல்வது தொடர் கதையாகின. கடந்தாண்டு சுகாதாரத்துறை மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால் கேரளாவில் இருந்து கழிவுகள் கொண்டு வந்த 28 லாரிகளை புளியரை சோதனை சாவடியில் மடக்கினர். லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன், திருப்பியும் அனுப்பி வைக்கப்பட்டன. இச்சம்பவத்தையடுத்து கழிவுகள் கொண்டு வரப்படுவது குறைந்திருந்தது.

இந்நிலையில் தற்போது மீண்டும் கேரளாவில் இருந்து மருத்துவக்கழிவுகள், இறைச்சி கழிவுகள் கொண்டு வருவது துவங்கி உள்ளது. நேற்று செங்கோட்டை - தென்காசி சாலையில் இலஞ்சி அருகே உள்ள கொட்டாகுளம் பெரியகுளத்தில் சாலையோரத்தில்  மருத்துவக்கழிவுகள், ரசாயன கழிவுகள் மூட்டை, மூட்டையாக வீசப்பட்டு கிடந்தன. இதில் ஒரு மூட்டை உடைந்து அதிலிருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. அதில் குளுக்கோஸ் ஏற்றிய டியூப்கள் உள்ளிட்ட மருத்துவ கழிவுகள் காணப்பட்டன. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயமும் காணப்படுகிறது.

இதேபோல் தென்காசி அடுத்த கொட்டாகுளம், குத்துக்கல்வலசையில் இருந்து கணக்குப்பிள்ளைவலசை செல்லும் சாலை, இலஞ்சி செல்லும் சாலை,  இலத்தூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மூட்டை மூட்டையாக மருத்துவக்கழிவுகள்  கொட்டப்பட்டிருந்தது. தகவலறிந்த சுகாதாரத்துறை  அலுவலர்கள் மற்றும் தென்காசி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் நேரில்  சென்று பார்வையிட்டனர். ஓராண்டிற்கு பிறகு கேரளாவில் இருந்து கழிவுகள் கொண்டு வரப்படுவது துவங்கி இருப்பதால், ஆரம்பத்திலேயே கண்காணிப்பை தீவிரப்படுத்தி தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கேரள கழிவுகளை ஏற்றி வரும் வாகனங்களுக்கு கடந்த முறையை போன்று அதிக அபராதம் விதித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

Related Stories: