ரயில்வே வாரியத்துக்கு நிதி ஆயோக் கடிதம் 150 ரயில்கள், 50 ரயில் நிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்க தனிக் குழு

புதுடெல்லி: நாடு முழுவதும் 150 ரயில்கள் மற்றும் 50 ரயில் நிலையங்களை தனியாரிடம் ஒப்படைப்பதற்கான திட்டத்தை வகுக்க அதிகாரமிக்க சிறப்புக் குழு ஒன்றை அமைக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியுள்ளது. டெல்லி-லக்னோ இடையே இயக்கப்படும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்கும் பொறுப்பு, ரயில்வே துணை நிறுவனமான ஐஆர்சிடிசியிடம் சமீபத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதில் ரயில் பைலட், கார்டு தவிர அனைவருமே ஐஆர்சிடிசி நியமித்த  ஊழியர்கள். பயணிகளுக்கு ₹25 லட்சம் வரை இலவச காப்பீடு மற்றும் ரயில் பயணத்தில் தாமதம் ஏற்பட்டால் இழப்பீடு தொகை என பல சலுகைளை ஐஆர்சிடிசி அறிவித்தது. இதற்கு ரயில்வே சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  இந்நிலையில், ரயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவுக்கு, நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:நாட்டில் உள்ள 400 ரயில் நிலையங்களை உலகத்தரத்துக்கு மேம்படுத்த வேண்டிய தேவை ரயில்வே வாரியத்துக்கு உள்ளது. இதுவரை ஒரு சில ரயில் நிலையங்கள் மட்டுமே மேம்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பாக ரயில்வே அமைச்சருடன்  விரிவான ஆலோசனை நடத்தினேன். குறைந்தது 50 ரயில் நிலையங்களையாவது முன்னுரிமை அடிப்படையில் மேம்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில், 6 விமான நிலையங்களின் பராமரிப்பு பணி தனியாரிடம் விடப்பட்டன. இதில் கிடைத்த அனுபவங்களை கருத்தில் கொண்டு, ரயில் நிலையங்களின் பராமரிப்பையும் குறிப்பிட்ட காலத்துக்குள் தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும்.  இதற்கு செயலாளர்கள் அடங்கிய அதிகாரம் மிக்க குழுவை ஏற்படுத்த வேண்டும். பயணிகள் ரயில் போக்குவரத்தை தனியாரிடம் ஒப்படைக்க ரயில்வே அமைச்சகம் ஏற்கனவே முடிவு செய்துள்ளதையும், முதல் கட்டமாக 150 ரயில்களை  தனியாரிடம் ஒப்படைப்பது பற்றி ரயில்வே அமைச்சகம் எண்ணிக் கொண்டிருப்பதை நீங்கள் ஏற்கனவே அறிவீர்கள். இந்த சிறப்புக் குழுவில் ரயில்வே வாரிய இன்ஜினியரிங் பிரிவு உறுப்பினர், போக்குவரத்து பிரிவு உறுப்பினர் கண்டிப்பாக இடம்  பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: