சவூதி பெண்கள் இனி ராணுவம், கடற்படை, விமானப் படைகளில் சேரலாம் : விதிகளை தளர்த்தியது சவூதி அரேபிய அரசு

சவூதி அரேபியா : பழமைவாத இஸ்லாமிய நாடான சவூதி அரேபியாவில் நாளுக்கு நாள் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ராணுவம், கடற்படை, விமானப் படைகளில் பெண்களும் சேரலாம் என சவூதி அரேபிய அரசு அனுமதி அளித்துள்ளது.

Advertising
Advertising

நாளுக்கு நாள் கட்டுப்பாடுகளை தளர்த்தும் சவூதி

சவுதி அரேபியாவில் மன்னர் ஆட்சி நடைபெறுகிறது. இங்கு பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மற்ற நாடுகளை போல பெண்கள் இங்கு சுதந்திரமாக இருக்க முடியாது. ஆண்களுடன் பழகவோ, வெளியிடங்களுக்கு செல்லவோ பெண்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மான், பெண்களின் உரிமைகளை விரிவுபடுத்தும் வகையில் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அவ்வகையில் பெண்கள் வாகனங்கள் ஓட்டுவதற்கு இருந்த தடை கடந்த ஆண்டு விலக்கப்பட்டது. அதே போல் ஆண், பெண் என்ற பாகுபாடின்றி, 21 வயதுக்கு மேற்பட்ட குடிமக்கள் யார் விண்ணப்பித்தாலும் பாஸ்போர்ட் வழங்க வேண்டும், 21 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள, கணவர் அல்லது தந்தையின் அனுமதி பெறத் தேவையில்லை எனவும் அரச ஆணை பிறப்பிக்கப்பட்டது.

முப்படைகளில் சேர பெண்களுக்கு அனுமதி

இதனிடையே துணை ராணுவப் படையான பாதுகாப்பு படைகளில் பெண்கள் சேருவதற்கும் கடந்த ஆண்டு அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், ராணுவம், கடற்படை, விமானப்படைகளிலும் பெண்கள் சேரலாம் என சவூதி அரசு அறிவித்துள்ளது.இது, பெண்களுக்கு அதிகாரமளிக்கும் அடுத்த நடவடிக்கை என சவூதி வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

சவுதி அரேபியாவின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக்களையே சார்ந்திருக்கிறது. இதனைப் படிப்படியாகக்  குறைத்து வேறு வழிகளிலும் தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்த கடந்த சில ஆண்டுகளாகவே பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது சவுதி அரேபிய அரசு. அண்மையில்  49 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு சுற்றுலா விசா வழங்கப்போவதாக சமீபத்தில் அறிவித்தது.சவூதி அரசு.மேலும் அரேபியாவிற்கு சுற்றுலா செல்லும் வெளிநாட்டு ஆண்களும் பெண்களும் இனி விடுதியில் ஒன்றாக அறை எடுத்து தங்கிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Related Stories: