சீர்காழி அருகே ஓஎன்ஜிசி துரப்பணப் பணியால் மாசடைந்த நிலத்தடி நீர்: கருப்பு நிறத்தில் துர்நாற்றத்துடன் நீர் வருவதாக பொதுமக்கள் வேதனை

சீர்காழி: சீர்காழி அருகே ஓஎன்ஜிசி எண்ணெய் துரப்பணப் பணியால் நிலத்தடி நீர் கருப்பாகி துர்நாற்றம் வீசுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. சீர்காழி அருகே பழையபாளையம் கிராமத்தில் 4 ஆண்டுகளுக்கு முன் ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் துரப்பணப் பணியை தொடங்கியுள்ளது. அதனை அடுத்து மெல்ல மெல்ல நிலத்தடி நீரின் தன்மை மாறிவந்ததாக கூறும் மக்கள் தற்போது கை பம்புகளில் வரும் தண்ணீர் முழுமையாக கருப்பு நிறத்தில் மாறிவிட்டதாக கவலை தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து சுற்றியுள்ள பல கிராமங்களில் நிலத்தடி நீரின் தன்மை முற்றிலும் மாறி விட்டதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் வாரம் ஒருமுறை விநியோகிக்கப்படும் குடிநீரை மட்டுமே நம்பியுள்ளதாக பழையபாளையம் மக்கள் கூறுகின்றனர். மேலும் தண்ணீர் தேவை என்றால் 5 கிலோ மீட்டர் வரை செல்ல வேண்டியுள்ளதாகவும், இதனால் பலர் ஊரை விட்டு சென்று விட்டதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இது குறித்து அங்குள்ள மக்கள் தெரிவித்ததாவது, ஓஎன்ஜிசி எண்ணெய் துரப்பணப் பணி தொடங்குவதற்கு முன்பு தண்ணீர் சுவைமிகுந்ததாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தது. தற்போது நிலத்தடி நீரானது கடுமையாக பாதிக்கப்பட்டு அதிலிருந்து வெளிவரும் தண்ணீர் கருப்பு நிறமாக காட்சியளிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தண்ணீரை பருகுவதன் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உள்ள அனைவருக்கும் உடல் உபாதைகள் ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர். எனவே மத்திய, மாநில அரசுகள் இப்பிரச்சனைகளை கவனத்தில் கொண்டு தங்கள் வாழ்வாதாரத்திற்கு உதவுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: