5000 கழிவறைகள் கட்டி முடிக்க காரணமான மதுரை பெண்: விருது வழங்கி மத்திய அரசு கவுரவிப்பு

மதுரை: 5000 கழிவறைகள் கட்டி முடிப்பதற்கு காரணமாக இருந்த பெண்ணிற்கு மத்திய அரசு விருது வழங்கி கவுரவித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக,  பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டு, மகாத்மா  காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. வீடுகளில் கழிப்பறைகள் கட்டுவது, பொதுக்கழிப்பறைகள்  அமைப்பது, திடக் கழிவு மேலாண்மையை உருவாக்குவது உள்ளிட்டவற்றை நோக்கமாக கொண்டது இந்தத் திட்டம்.

திட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 2019-ம் ஆண்டு மகாத்மா காந்தியின் 150வது பிறந்த ஆண்டைக் கொண்டாட  இருக்கும் தருணத்தில் தூய்மையான இந்தியா அவருக்கு அஞ்சலி செலுத்துவதாக அமையும் எனத் தெரிவித்திருந்தார். பிரபலங்கள் முதல் சாமானிய  மக்கள் வரை பலர் இந்தத் திட்டத்துக்கு தூதுவர்களாக நியமிக்கப்பட்டார்கள்.

இதற்கிடையே, மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் பகுதியைச் சேர்ந்த செல்விக்கு, 11ம் வகுப்பு படித்ததே கல்வி தகுதியாக இருந்தாலும், கிராமம்  கிராமமாக அவர் மேற்கொண்ட பிரச்சார பயணத்தின் விளைவாக சுமார் ஐந்தாயிரம் கழிவறைகள் கட்டி முடிக்க அவர் காரணமாகி இருப்பது இன்று  மதுரைக்கே பெருமை சேர்த்துள்ளது. செல்வியின் பணியை பாராட்டி திருமங்கலம் வட்டார ஊரக வளர்ச்சி துறையில் தற்காலிக பணியாளராக நியமித்து  தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின்  பரிந்துரையால் தமக்கு விருது கிடைத்திருப்பதை மக்களுக்கு சமர்பிப்பதாக செல்வி கூறுகிறார்.

செல்விக்கு விருது கிடைத்திருப்பதை அறிந்து வரவேற்பு தெரிவிக்கும் அப்பகுதி மக்கள், அவருடைய தொடர் வலியுறுத்தல் காரணமாகவே தாங்களும்  கழிவறை கட்டியதாகவும், தங்கள் பகுதியில் நல்ல சுகாதார சூழல் உருவாகியுள்ளதாகவும் பயனாளிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில்,  ஊக்குவிப்பாளர் பணியில் சிறப்பாக செயல்பட்டவர் என்ற அடையாளத்துடன் மதுரையைச் சேர்ந்த செல்வி என்பவருக்கு மத்திய அரசு விருது வழங்கி  கவுரவித்துள்ளது. சுகாதாரமாக இருக்க வேண்டும் என பிரச்சாரம் செய்து கொண்டிருப்பதை விட, ஒவ்வொருவரும் செல்வியாக செயல்பட வேண்டும்  என்பதே மத்திய மாநில அரசுகளின் விருப்பமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: