விலங்குகள் நல ஆர்வலர் மீது 48 வயது பெண் பலாத்கார புகார்: அந்தேரியை சேர்ந்தவர்

அந்தேரி: விலங்குகள் நல ஆர்வலர் மீது அந்தேரியை சேர்ந்த 48 வயது பெண் பலாத்கார புகார் கொடுத்துள்ளார். தென்மும்பை பெடர்ரோடு பகுதியை சேர்ந்தவர் விஜய் மொஹானி. விலங்குகள் நல அமைப்பு ஒன்றை நடத்தி வருகிறார். அந்தேரியை சேர்ந்த 48 வயது பெண் ஒருவருடன் விஜயிக்கு அறிமுகம் ஏற்பட்டது. கடந்த 2017ம் ஆண்டு முதன் முதலில் பொது நண்பர் ஒருவர் மூலம் அறிமுகமான அவர்கள் அடிக்கடி செய்திகளை பரிமாறிக்கொண்டனர். அதோடு ஒரு சில முறை நேரிலும் சந்தித்துக் கொண்டனர். இந்த சந்திப்பின் போது 48 வயது பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக விஜய் உறுதியளித்ததாக தெரிகிறது.

இதையடுத்து இருவரும் அடிக்கடி மும்பைக்கு வெளியில் செல்ல ஆரம்பித்தனர். இதற்காக அப்பெண்ணே செலவு செய்துள்ளார்.  அதோடு அவருக்கு பொருளாதார ரீதியாகவும் நிதியுதவி செய்துள்ளார். வெளியில் செல்லும்போதெல்லாம் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். ஆனால் நாளடைவில் விஜய் திருமணம் தொடர்பான பேச்சை எடுக்கவில்லை என்று அப்பெண் கருதினார். அதோடு விஜயிக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும் அப்பெண் கருதினார். இதையடுத்து விஜய் தன்னை மோசடி செய்து விட்டதாக கூறி போலீசில் புகார் செய்துள்ளார். போலீசாரும் விஜய் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர்.

ஆனால் இக்குற்றச்சாட்டை விஜய் மறுத்துள்ளார். அப்பெண் பல பில்டர்களிடம் பணத்தை வாங்கிவிட்டு திரும்ப கொடுக்கவில்லை என்றும், எனவே பில்டர்கள் ஒன்றாக சேர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் போலீசில் புகார் செய்துள்ளனர் என்று விஜய் வழக்கறிஞர் ராவன் தெரிவித்துள்ளார். ஓசிவாரா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விஜய் முன் ஜாமீன் கோரி வழக்கு தொடர இருக்கிறார்.

Related Stories: