*சுற்றுலா, உணவு விடுதி உரிமையாளர்கள் ஏக்கம்
மூணாறு : மூணாறில் சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக குறைந்தால் அவர்களை நம்பி வாழ்க்கை நடத்தும் சுற்றுலா விடுதி மற்றும் உணவு விடுதி உரிமையாளர்கள் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். ``தென்னகத்து காஷ்மீர்’’ என்று அழைக்கப்படும் மூணாறு முக்கிய சுற்றுலா தலமாகும். மூணாறில் நிலவும் இதமான சூழல் மற்றும் இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்க உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் அன்றாடம் வருகை தருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு மூணாறில் பெய்த கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு, மண்சரிவு போன்ற இயற்கை பேரழிவுகள் காரணமாக மூணாறு சுற்றுலாத்துறை கடும் பாதிப்படைந்துள்ளது. கடந்த 10 ஆண்டு இடைவேளையில் தற்போது தான் மூணாறுக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. மேலும் ஓணம் பண்டிகை காலங்களில் ஏரளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்த்த உணவு விடுதி, சுற்றுலா விடுதி உரிமையாளர்களுக்கு ஏமாற்றமடைந்தனர். இதன் மூலம் மூணாறில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதிக சுற்றுலா பயணிகள் வருகை தரும் பகுதிகளான மாட்டுப்பட்டி, குண்டலை, ராஜமலை போன்ற பகுதிகளில் கடந்த சீசனை காட்டிலும் இந்த ஆண்டு 10 சதவீதம் மட்டுமே சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். அதிகமாக சுற்றுலா பயணிகள் வரும் மாட்டுப்பட்டி பகுதியில் சீசன் நேரங்களில் சராசரி தினந்தோறும் 4000 முதல் 6000 சுற்றுலா பயணிகள் வருவது வடிக்கையாகும். ஆனால் தற்போது தினசரி 200 முதல் 500 சுற்றுலா பயணிகள் மட்டுமே மாட்டுப்பட்டி பகுதிக்கு வந்து செல்கின்றனர். மூணாறில் மற்ற சுற்றுலா பகுதிகளான டாப் ஸ்டேஷன், பள்ளிவாசல் ஆத்துக்காடு நீர்வீழ்ச்சி, குண்டலை போன்ற பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து காணப்படுகிறது. மூணாறில் நிலவும் இயற்கை மாற்றங்கள், திடீரென்று பெய்யும் கனமழை, பழுதடைந்த சாலைகள் போன்றவற்றின் காரணமாக சுற்றுலா துறை பெரும் பாதிப்பை எட்டியுள்ளது.வங்கிகளில் கடன் வாங்கி சுற்றுலா விடுதிகள் மற்றும் உணவு விடுதிகள் அமைத்திருக்கும் உரிமையாளர்கள் பயணிகள் குறைவால் கடனை கட்டமுடியாமல் பரிதவித்து வருகின்றனர்.கடந்த 2017ம் ஆண்டு 4.85 லட்சம் உள்ளூர் மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகளும் 48 ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் மூணாறுக்கு வருகை தந்துள்ளனர். மேலும் 2018ம் ஆண்டு நீல குறிஞ்சி மலர்கள் மூணாறில் பூத்தபோது 8 லட்சம் சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்று கணக்கிடப்பட்டது.ஆனால், 1 .2 லட்சம் சுற்றுலா பயணிகள் மட்டுமே மூணாறுக்கு வந்துள்ளனர். வெள்ளப்பெருக்கிற்கு பின்பு மூணாறில் உணவு விடுதி சங்கத்தினர் மற்றும் சுற்றுலா விடுதி சங்கத்தினர் சார்பாக மூணாறை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர பல புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தியும் பலன் அளிக்கவில்லை. எனவே மூணாறை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர அரசு முன் முயற்சி எடுத்து புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளது.