ஆள்மாறாட்டத்தை தடுக்க அடுத்தாண்டு முதல் நீட் தேர்வுக்கு ஆதார் கட்டாயம்?: மத்திய அரசுக்கு தேசிய தேர்வு முகமை கடிதம்

புதுடெல்லி: ஆள்மாறாட்ட புகார் எழுந்துள்ளதால், அடுத்தாண்டு நீட் தேர்வுக்கு, ஆதார் மற்றும் பயோ-மெட்ரிக் தகவல்களை பயன்படுத்தி கொள்ள மத்திய அரசிடம் தேசிய தேர்வு முகமை அனுமதி கேட்டுள்ளது. மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் கடுமையான விதிமுறைகளை பின்பற்றியும் ஆள்மாறாட்டம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இந்த மோசடியில் ஈடுபட்ட உதித் சூர்யா, முகமது இர்பான், பிரவீன், ராகுல் டேவிஸ் ஆகிய 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த முறைகேட்டை தடுக்க, அடுத்தாண்டு முதல் நீட் தேர்வில் ஆதார், பயோ-மெட்ரிக் தகவல்களை சரிபார்க்க தேசிய தேர்வு முகமை (என்டிஏ) முடிவு செய்துள்ளது. இதற்காக மத்திய அரசின் அனுமதியைப் பெற என்டிஏ இயக்குனர் வீனித் ஜோஷி கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து நேற்று அவர் அளித்த பேட்டி:மத்திய அரசு அனுமதித்தால், ஆதாரில் உள்ள கைரேகை, கருவிழிப்படலம் போன்ற பயோ-மெட்ரிக் தகவல்கள் நீட் தேர்வு விண்ணப்பம், தேர்வு, கவுன்சலிங் மற்றும் சேர்க்கை நடக்கும்போது பயன்படுத்தப்படும். அப்போது, ஆள்மாறாட்டத்துக்கு வாய்ப்பு இருக்காது. அதனால், அடுத்தாண்டு நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆதார் எண்ணை சமர்ப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுவார்கள். தற்போது, நீட் தேர்வு எழுதுவதற்கு முன்னும், பின்னும் இருமுறை மாணவர்களின் கைரேகைகள் காகிதத்தில் பெறப்படுகின்றன.நீட் தேர்வு எழுதிய ஒவ்வொரு மாணவனையும் சரிபார்க்க, இந்த ஆவணத்தை தமிழக அரசு கேட்டு கடிதம் எழுதியுள்ளது. இந்தாண்டு நீட் தேர்வில் இதுபோன்ற மோசடியை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. தேர்வு அறைக்கு மாணவர்கள் என்ன கொண்டு வர வேண்டும் என்பதில்தான் கவனமாக இருந்தோம். அடுத்தாண்டு மாணவர்களுக்கு சிரமம் இ்ல்லாதவகையில், விதிமுறைகளை கடுமையாக்குவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: