கல்லிடைக்குறிச்சி, அம்பை பெருமாள் கோயில்களில் கருட சேவை

அம்பை: கல்லிடைக்குறிச்சி, அம்பை பெருமாள் கோயில்களில் புரட்டாசி சனிக்கிழமை கருட சேவை நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். கல்லிடைக்குறிச்சி ஸ்ரீஆதிவராக பெருமாள் கோயிலில் நேற்று புரட்டாசி 3ம் சனிக்கிழமை கருடசேவை நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு பெருமாளுக்கு தீபாராதனை நடந்தது. 7.30 மணிக்கு கோயிலில் இருந்து புறப்பட்டு மேளதாளம் முழங்க தாமிரபரணி நதியிலிருந்து ஊர்வலமாக புனித நீர் கொண்டு வரப்பட்டு சன்னிதானத்தில் வைத்து பூஜை செய்யப்பட்டது.

பின் திருமஞ்சனம் சிறப்பு அபிஷேக தீபாராதனை நடந்தது. மாலை 5.30 மணிக்கு கருடருக்கு சிவப்பு மலர்களால் சட்டை சாத்தல், சாயரட்ஷை நடந்தது. இரவு 10.30 மணிக்கு வாணவேடிக்கை முழங்க சுவாமி கருட வாகனத்தில் சப்பரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து நடந்த தீபாராதனைக்குப் பின் திருவீதியுலா புறப்பட்ட கருட வாகன சப்பரம் கோயிலை சுற்றி உள்ள நான்கு மாடவீதிகள் வழியாக சன்னதி தெருவிலுள்ள கோயில் முன் வந்தது. பின் அங்கிருந்து அலங்கரிக்கப்பட்ட வண்டி சப்பரத்தில் எழுந்தருளிய கருட வாகனம் முக்கிய 4 ரதவீதி வழியாக பக்தர்களுக்கு அருள்பாலித்து இன்று அதிகாலை 2 மணிக்கு கோயிலை வந்தடைந்தது.

நிகழ்ச்சியில் வழி நெடுகிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். இதுபோல் அம்பாசமுத்திரம் ஸ்ரீசத்யபாமா ருக்மணி சமேத வேணுகோபால் கிருஷ்ணசுவாமி கோயில், தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள அலமேலு மங்கை தாயார் சமேத புருஷோத்தம்ம பெருமாள் கோயில், லெட்சுமி நாராயண சுவாமி கோயில், பிரம்மதேசம் ஸ்ரீ சத்யபாமா ருக்மணி சமேத வேணுகோபால் கிருஷ்ணசாமி கோயில்களில் 3வது சனிக்கிழமை கருடசேவை நிகழ்ச்சி நடந்தது.

Related Stories: