தமிழகத்தில் நன்னடத்தை கைதிகளை கொண்டு எட்டு திறந்தவெளி சிறைச்சாலைகள்: சிறைத்துறை அதிகாரிகள் தகவல்

வேலூர்:  தமிழகத்தில் 9 மத்திய சிறைகள், பெண்களுக்கான 5 தனிச்சிறைகள், 9 மாவட்ட சிறைகள், 88  ஆண்களுக்கான கிளைச் சிறைகள், 8 பெண்கள் கிளைச் சிறைகள், ஆண்களுக்கான 2 தனி கிளைச் சிறைகள், 12 பார்ஸ்டல் பள்ளி, 3  திறந்தவெளிச் சிறை என மொத்தம் 138 சிறைகள் இருக்கிறது. இவற்றில் 22,332 கைதிகளை அடைக்க  இடவசதி உள்ளது. சிறைகளில் நன்னடத்தை கைதிகள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில், சென்னை, வேலூர், சேலம், திருச்சி உள்ளிட்ட 8 மத்திய சிறைகளில் காலியாக உள்ள இடங்களில் திறந்தவெளி சிறைக்கூடம் கட்ட முடிவு செய்யப்பட்டு அதற்கான அரசாணை வெளியாகாமல் இருந்ததால் பணிகள்  மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது.

 இந்நிலையில், தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு 8 மத்திய சிறைகளில் திறந்தவெளி சிறைச்சாலைகள் அமைப்பதற்கான அரசாணை வெளியிட்டது. இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: சென்னை புழல் 1, கோவை, வேலூர், கடலூர், திருச்சி, சேலம், மதுரை, பாளையங்கோட்டை ஆகிய 8 மத்திய சிறைகளின் வளாகத்தில், சிறிய அளவிலான திறந்தவெளிச் சிறைச்சாலைகள்  அமைப்பதற்கான அரசாணை வெளியானது. இதையடுத்து தற்போது 8 சிறைச்சாலை வளாகங்களில், திறந்தவெளி சிறைச்சாலை அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட உள்ளது.   சிறிய அளவிலான திறந்தவெளி சிறைச்சாலை அமைக்கப்பட உள்ள பகுதிகளில், அங்குள்ள  நிலங்களில், கைதிகள் விவசாய பணிகள் மேற்கொள்ள உள்ளனர்.

 திறந்தவெளியில் சிறையில் நன்னடத்தை அடிப்படையில் கைதிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அரசாணையின் படி 100 கைதிகள் வரை திறந்தவெளி சிறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். கைதிகளை தேர்வு செய்வதற்கான குழு  அமைக்கப்பட உள்ளது.

இக்குழுவில், சிறைக் கண்காணிப்பாளர், நல அலுவலர், ஜெயிலர் உள்ளிட்ட கொண்ட குழுவினர் டிஐஜி தலைமையில் நன்னடத்தை கைதிகளை தேர்வு செய்ய உள்ளனர். நன்னடத்தை கைதிகளில் 21 வயது முதல் 55 வயது வரையில் உள்ள  தண்டனை கைதிகள் மட்டுமே திறந்தவெளி சிறைச்சாலைக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: