அயோத்தி நில வழக்கில் அக்.17-ம் தேதிக்குள் அனைத்து தரப்பு வாதங்களையும் முடிக்க வேண்டும்; உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: அயோத்தி நில உரிமை வழக்கில் அனைத்து தரப்பினரும் வாதங்களை அக்டோபர் 17-ம் தேதிக்குள் முடித்துக்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே அக்.18-ம் தேதி வாதங்களை முடிக்க வேண்டும் என்று கூறிய உச்சநீதிமன்றம் தற்போது அக்.17-க்குள் முடிக்க உத்தரவிட்டுள்ளது. அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் 2.77 ஏக்கர் நிலம் வழக்கில், சன்னி வக்பு வாரியம், இந்து  மகா  சபா மற்றும் நிர்மோகி அகாரா அமைப்புகள் நிலத்தை பகிர்ந்து எடுத்துக் கொள்ள  அலகாபாத்  உயர் நீதிமன்றம் கடந்த 2010ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதை  எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கில்  மத்தியஸ்தம் செய்யும் முயற்சியும் தோல்வி அடைந்தது. இதைத் தொடர்ந்து, அயோத்தி  வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் 5 நீதிபதிகள் அடங்கிய  அரசியல் சாசன அமர்வு நாள்தோறும் விசாரித்து வருகிறது. ந்த வழக்கில் சமீபத்தில்  முஸ்லிம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜிலானி வாதிட்டபோது, ‘அயோத்தியில்  பாபர் மசூதி அமைந்திருந்த இடத்தில் இருந்து சிலைகள், தூண்கள்  கண்டெடுக்கப்பட்டதால் ஏற்கனவே ராமர் கோயில் இருந்திருக்க வேண்டும் என்று  இந்திய தொல்லியல் துறையின் 2003ம் ஆண்டு அறிக்கையில் கூறப்பட்டிருப்பது  ஆட்சேபத்துக்குரியது.

இது பெரும்பாலும் அனுமானத்தின் அடிப்படையில்  அமைந்துள்ளது,’ என்றார். இதைக் கேட்ட நீதிபதிகள் அமர்வு, `தொல்லியல் துறையின் அறிக்கையில் ஆட்சேபம் இருந்தால் அதை  அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் எழுப்பி இருக்கலாம். அங்கு சட்டத்தின்படி  உங்களுக்கு நிவாரணம் கிடைக்கும். அதை இங்கு எழுப்புவதை அனுமதிக்க மாட்டோம்,’  என்று தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பான வாதங்களை  முன் வைப்பதற்கான கால அவகாசம் அக்டோபர் 18ம் தேதிக்குப் பிறகு ஒருநாள் கூட  நீட்டிக்கப்படாது,’ என்று நீதிபதிகள் அமர்வு திட்டவட்டமாக தெரிவித்தது. இந்நிலையில் அயோத்தி வழக்கில் இன்று அக்டோபர் 17-ம் தேதிக்குள் முடித்துக்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: