வரும் 2020ம் ஆண்டு முதல் எய்ம்ஸ், ஜிப்மர் மருத்துவ கல்லூரிகளிலும் நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை!

புதுடெல்லி: வரும் 2020ம் ஆண்டு முதல் எய்ம்ஸ், ஜிப்மர் மருத்துவ கல்லூரிகளிலும் நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ் மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளில் சேர தேசிய அளவிலான நீட் தேர்வு கட்டாயமாக உள்ளது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே இந்தியா முழுவதுமுள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகள், ராணுவ மருத்துவக் கல்லூரி, தனியார் மருத்துவப் பல்கலைக்கழகங்களில் சேர முடியும். அதுமட்டுமல்லாது, நீட் தேர்வு தரவரிசை அடிப்படையிலேயே அந்தந்த கல்லூரிகளில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

ஆனால் மத்திய அரசுக்கு சொந்தமான எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிகள் மற்றும் புதுவையில் உள்ள ஜிப்மர் மருத்துவ கல்லூரி ஆகியவற்றுக்கு மட்டும் தனியாக நுழைவு தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் 15 எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிகள் உள்ளன. அவற்றில் 1500 மருத்துவ இடங்கள் இருக்கின்றன. ஜிப்மரில் 200 மருத்துவ இடங்கள் உள்ளன. இந்த கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் தனியாக நுழைவு தேர்வு நடத்துவது அதிக செலவையும், பல்வேறு நடைமுறை சிக்கல்களையும் ஏற்படுத்துகிறது. அதுமட்டுமல்லாது, இதில் சில தவறுகள் நடப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. எனவே, ஜிப்மர் மற்றும் எய்ம்ஸ் கல்லூரிகளிலும் நீட் தேர்வு மூலமே இந்த மாணவர்களையும் தேர்வு செய்யலாமா? என மத்திய சுகாதாரத்துறை ஆய்வு மேற்கொண்டது.

இந்த ஆய்வின் முடிவில், அந்த கல்லூரிகளுக்கும் நீட் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடத்தலாம் என்ற முடிவுக்கு மத்திய சுகாதாரத்துறை வந்துள்ளது. எனவே அடுத்து ஆண்டு முதல் எய்ம்ஸ், ஜிப்மர் கல்லூரிகளில் நுழைவு தேர்வுகள் ரத்து செய்யப்படும் என்று அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். நீட் தேர்வு அடிப்படையில் உரிய ரேங்க் எடுத்தவர்கள் கல்லூரிகளை தேர்வு செய்து கொள்ளலாம். மேலும், நாடு முழுவதும் மத்திய அரசு, மாநில அரசு, தனியார் கல்லூரிகளில் 85,000 எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான இடங்கள் உள்ளன. இந்நிலையில், புதிய கல்லூரிகள் திறப்பு, ஏற்கனவே உள்ள கல்லூரிகளில் சீட் எண்ணிக்கை அதிகரிப்பு போன்றவற்றின் மூலம் அடுத்த ஆண்டு 90,000 மாணவர்கள் வரை சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: