நீதிமன்றத்தில் ராஜிவ் குமார் சரண்

கொல்கத்தா: சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்த்து வந்த கொல்கத்தா போலீஸ் ஆணையர் ராஜிவ் குமார் நேற்று அலிபூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த 2500 கோடி சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பான புகார்களை அரசு நியமித்த சிறப்பு விசாரணைக் குழு விசாரித்து வந்தது. இந்த குழுவில் இருந்த கொல்கத்தா காவல் ஆணையர் ராஜிவ் குமார் முக்கிய ஆதாரங்களை குற்றப்பத்திரிக்கையில் மறைத்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

சாரதா நிதி நிறுவன மோசடி மற்றும் முக்கிய ஆவணங்களை மறைத்தது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகின்றது. இந்த வழக்கில் ராஜிவ் குமாரை கைது செய்வதற்கு விதிக்கப்பட்டு இருந்த இடைக்கால தடையை கடந்த மாதம் 13ம் தேதி உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதனையடுத்து விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சிபிஐ தரப்பில் பலமுறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. கடந்த 3 வாரங்களாக ராஜிவ் குமார் எங்கிருக்கிறார் என்பதையும் சிபிஐ அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், கடந்த செவ்வாயன்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் அவருக்கு முன்ஜாமீன் வழங்கியது. இதனைத் தொடர்ந்து அலிபூர் நீதிமன்றத்தில் கூடுதல் தலைமை நீதிபதி சுப்ரதா முகர்ஜி முன்னிலையில் ராஜிவ் குமார் நேற்று சரண் அடைந்து ஜாமீன் பெற்றார்.

Related Stories: