சிறு மழைக்கு கூட தாக்குப்பிடிக்காமல் மாநகர தார் சாலைகள் மண்சாலைகளாக மாறும் அவலம்

திருச்சி: திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் சிறு மழைக்கு கூட தாக்குப்பிடிக்காமல் தார் சாலைகள் கற்கள் பெயர்ந்து, குண்டும் குழியுமாக சேதமடைந்து மண் சாலைகளாக மாறி வரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனஓட்டிகள் சாலைகளில் சென்று வருவதற்கு திணறி வருகின்றனர். திருச்சி மாநகரத்தில் கடந்து ஒரு மாதமாக மாலை நேரங்களில் திடீரென மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் உள்ள தார் சாலைகள் அரிப்பு ஏற்பட்டு பகுதி பகுதியாக சேதமடைந்து ஜல்லிக் கற்கள் மட்டுமே காணப்படுகிறது. மேலும் சில சாலைகள் குண்டும், குழியுமாக மழைநீர் தேங்கியும், வாகனங்கள் செல்ல முடியாமல் சேறும் சகதியுமாகவும் உள்ளது.

இதில் தொடர்ந்து மழை பெய்ததன் காரணமாக திருச்சி அரிஸ்டோ ரவுண்டான பாலத்தின் கீழே உள்ள திண்டுக்கல்-திருச்சி பிரிவு தார் சாலை பல இடங்களில் சேதமடைந்ததோடு, அதிலிருந்த ஜல்லிக்கற்கள் சாலை பகுதியில் சிதறி கிடக்கிறது. மேலும் இந்த சாலையில் கற்கள் பெயர்ந்ததால் ஏற்பட்ட பள்ளத்தில் வாகனங்கள் சிக்கி திணறுவது வாடிக்கையான ஒன்றாகும். இதனால் வாகனஓட்டிகள் கீழே விழுந்து காயங்கள் அடைவதும் தொடர்கதையாகிறது. இதுபோல திருவானைக்காவல் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி காட்சி மூலம் திறக்கப்பட்ட மேம்பாலத்தின் முகப்பு தோற்ற பகுதியில் தரமற்ற சாலை அமைக்கப்பட்டதால், தற்போது சாலை அரிப்பால் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. திண்டுக்கல்-திருச்சி சாலையில் உள்ள பொன்னநகர் பாலம் அருகே சாலைகள் பல்லாங்குழிபோல் சேதமடைந்துள்ளதால் இரவு நேரங்களில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.

திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள தார் சாலைகள் மற்றும் தெருச்சாலைகள் மழை காரணமாக சேறும் சகதியுமாக மாறி போக்குவரத்திற்கு பெரும் இடையூறை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகனஓட்டிகள் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இதில் குறிப்பாக தீரன்நகர், குழுமாயி அம்மன் தொட்டி பாலம், 4வது வார்டு பொன்னநகர் புங்கனூர், வீரேஸ்வரம் மேலத் தெரு, கே.கே.நகர், இந்தியன் பேங்க் காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தார் சாலைகள் சேதமானதால் மண் சாலையாக மாறி வருகிறது. மேலும் மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து தெரு சாலைகளும் பராமரிப்பின்றி முற்றிலும் சேதமடைந்து வருகிறது. இதானல் இப்பகுதியை சேர்ந்த பொது மக்களும், வேலைக்குச் செல்வோரும், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவியரும் தினந்தோறும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதுபோன்ற குண்டும், குழியுமான சாலைகள் டூவீலர், ஆட்டோ மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் டயர்களை பதம் பார்க்கின்றன. இதனால் ஏற்படும் செலவுகளால் வாகனஓட்டிகள் கடும் சிரமமடைகின்றனர். இதுதவிர இரவு நேரங்களில் பொதுமக்கள் மற்றும் வாகனஓட்டிகள் சேறும் சகதியுமான தெருக்களில் வந்து செல்ல முடியாமல் அவதியுறுகின்றனர். இந்த சிறிய மழைக்கே தாக்குப்பிடிக்க முடியாமல் தார் சாலைகள் அனைத்தும் குண்டும் குழியுமாக மாறி தற்போது மண் சாலை போல் காட்சி தருகிறது. எனவே பொதுமக்கள் மற்றும் வாகனஓட்டிகள் நலன் கருதி அனைத்து சாலைகளையும் தார் சாலைகளாக புதுப்பிக்க சம்பந்தப்பட்ட துறையினர், மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் தற்போதைய எதிர்பார்பாக உள்ளது.

Related Stories: