விழிப்புணர்வு பேரணிக்கு காத்திருந்த மாணவிகளை பாத யாத்திரைக்கு அழைத்து சென்ற பாஜகவினர்: ஈரோட்டில் பரபரப்பு

ஈரோடு: ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணிக்காக காத்திருந்த மாணவிகளை பாதயாத்திரை பிரச்சாரத்திற்கு பாஜகவினர் அழைத்து சென்றனர்.  பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளையொட்டி ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து பாதயாத்திரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் நேற்று காலை  மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் மழைநீர் சேகரிப்பு, பிளாஸ்டிக் தடை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மகளிர் மேம்பாடு, மது இல்லாத சமுதாயத்தை உருவாக்குவது போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி பாதயாத்திரையை தொடங்க  திட்டமிட்டனர்.  ஆனால் கூட்டம் குறைவாக இருந்ததால் பாத யாத்திரையை தொடங்குவதில் கால தாமதம் ஏற்பட்டது. அப்போது மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து தனியார் கல்லூரி சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சிக்காக என்சிசி,  என்எஸ்எஸ் மாணவ, மாணவிகள் காத்திருந்தனர். இதை பார்த்த பாஜகவினர் உடனடியாக பாதயாத்திரை நிகழ்ச்சியை ஆரம்பித்தனர். அங்கிருந்த மாணவிகளையும் அழைத்துள்ளனர்.

எந்த நிகழ்ச்சிக்காக தங்களை அழைத்து வந்தனர் எனத் தெரியாமல் மாணவ, மாணவிகள் பாஜகவினர் நடத்திய பாத யாத்திரையில் நடந்து சென்றனர். சுமார் அரைமணி நேரத்திற்கு பிறகு பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணிக்காக நிகழ்ச்சியை  ஏற்பாடு செய்தவர்கள் வந்து பார்த்தபோது அங்கு மாணவிகளை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த நிர்வாகிகள் இதுதொடர்பாக மாணவிகளை தொடர்பு கொண்டபோது பாஜக பாத யாத்திரையில் சென்று கொண்டிருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணியை தொடங்க முடியாமல் தவித்த நிர்வாகிகள் உடனடியாக பாஜக பாத யாத்திரை சென்ற இடத்தை அறிந்து மாணவ, மாணவிகளை மீண்டும் அழைத்து வந்து பிளாஸ்டிக் விழிப்புணர்வு  பேரணியை நடத்தினர். இந்த சம்பவத்தால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: