பெங்களூரு மாநகராட்சியை கைப்பற்றியது பாஜ கவுதம் குமார் ஜெயின் புதிய மேயராக தேர்வு

பெங்களூரு: நான்கு வருட போராட்டத்திற்கு பிறகு பெங்களூரு மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளை பாஜ கைப்பற்றியது. பாஜ கவுன்சிலர் கவுதம்குமார் ஜெயின் மேயராகவும், மோகன்ராஜ் துணை மேயராகவும் பதவியேற்றனர்.பெங்களூரு மாநகராட்சி மேயராக இருந்த கங்காம்பிகே பதவிக்காலம் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து நேற்று மேயர், துணை மேயர் தேர்தல் நடைபெற்றது. பாஜ சார்பில் கவுதம்குமார், பத்மநாபரெட்டி மற்றும் மஜத - காங்கிரஸ் கூட்டணி  சார்பில் சத்யநாராயண் ஆகியோரின் மனுக்களை பரிசீலனை செய்த மண்டல தேர்தல் அதிகாரி ஹர்ஷகுப்தா அவை ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவித்தார். வேட்புமனுவை வாபஸ் பெற விரும்பினால் திரும்ப பெற்றுக்கொள்ளலாம் எனக்கூறி  2  நிமிடம் கால அவகாசம் அளித்தார்.

இதைத்தொடர்ந்து பத்மநாபரெட்டி வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். கடைசியாக, பாஜவின் சார்பில் கவுதம் குமாரும், காங்கிரஸ், மஜத கூட்டணி சார்பில் சத்யநாராயணனும் களத்தில் நின்றனர். இதையடுத்து மண்டல தேர்தல் அதிகாரி  ஹர்ஷகுப்தா குரல் வாக்கெடுப்பு நடத்தினார். காங்கிரஸ், மஜத கூட்டணி வேட்பாளர்  சத்யநாராயணனுக்கு ஆதரவாக 112 வாக்குகளும், பாஜ மேயர் வேட்பாளர் கவுதம்குமாருக்கு ஆதரவாக 129 வாக்குகளும் கிடைத்தன.இதையடுத்து பெங்களூரு மாநகராட்சியின் 53வது மேயராக பாஜவின் கவுதம்குமார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட உடனே பாஜவினர் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர். துணை மேயர் தேர்தலில் பாஜ கவுன்சிலர் மோகன்ராஜ் வெற்றி  பெற்றார். பாஜவினர் நான்கு வருட போராட்டத்திற்கு பிறகு பெங்களூரு மாநகராட்சியை கைப்பற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: