மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் ஓடும் பஸ்சில் கண்டக்டரை தாக்கிய போலீசார் 29ம் தேதி ஆஜராக வேண்டும்

நெல்லை: நெல்லை அருகே அரசு பஸ்சில் கண்டக்டரை தாக்கிய இரு போலீசாரும் வரும் 29ம் தேதி தூத்துக்குடியில் நடைபெறும் விசாரணையில் ஆஜராக மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. குமுளியிலிருந்து நெல்லை வழியாக நாகர்கோவிலுக்கு கடந்த மாதம் 29ம் தேதி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. நெல்லை புதிய பஸ் நிலையத்திற்கு வந்த பஸ் அங்கிருந்து நாகர்கோவில் நோக்கி சென்றது. அந்த பஸ்சில் கூடங்குளத்திற்கு நெல்லை மாவட்ட ஆயுதப்படை காவலர்கள் தமிழரசன், மகேஷ் ஆகியோர் பயணித்தனர். மூன்றடைப்பு அருகே கண்டக்டர் ரமேஷ், அவர்களிடம் பயணத்திற்கான வாரன்ட் கேட்டார். இது தொடர்பாக அவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் கண்டக்டரை தாக்கியதில் அவரது நெற்றியில் காயம் ஏற்பட்டு ரத்தம் வந்தது. இது குறித்து மூன்றடைப்பு காவல் நிலையத்தில் கண்டக்டரும், போலீசாரும் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்தனர்.

காயமடைந்த கண்டக்டர் ரமேஷ் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்பு மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிந்து மகேஷ், தமிழரசன் ஆகியோரை கைது செய்து, ஜாமீனில் விடுவித்தனர். கண்டக்டர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனிடையே மாநில மனித உரிமை ஆணைய நீதிபதி ஜெயச்சந்திரன் தாமாக முன்வந்து இதனை வழக்காக விசாரணைக்கு எடுத்தார். தூத்துக்குடி சுற்றுலா மாளிகையில் வரும் 29ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் விசாரணைக்கு காவலர்கள் மகேஷ், தமிழரசன் இருவரும் ஆஜராக வேண்டும் என நெல்லை மாவட்ட எஸ்பிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

Related Stories: