திருப்பதி கோயில் பிரம்மோற்சவ 2ம் நாள் சின்ன சேஷ வாகனத்தில் மலையப்பசுவாமி பவனி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 2ம் நாளான இன்று காலை மலையப்பசுவாமி சின்ன சேஷ வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவத்தையொட்டி நேற்று மாலை 5.23 மணி முதல் 6 மணிக்குள் மீன லக்கினத்தில் தங்க கொடிமரத்தில் பிரம்மோற்சவ கொடி ஏற்றப்பட்டது. ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தனது குடும்பத்தினருடன் பேடி ஆஞ்சநேய சுவாமி கோயிலில் இருந்து அரசு சார்பில் பட்டு வஸ்திரங்களை தலையில் சுமந்தபடி ஏழுமலையான் கோயிலுக்கு கொண்டு சென்று வெங்கடேஸ்வர சுவாமிக்கு சமர்ப்பித்தார்.

பிரம்மோற்சவத்தின் முதல் நாளான நேற்றிரவு பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி நான்கு மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 2ம் நாளான இன்று காலை, 5 தலைகளுடன் கூடிய சிறிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெரிய சேஷ வாகனத்தை ஆதிசேஷனாகவும், சிறிய சேஷ வாகனத்தை வாசுகியாகவும் நினைத்து சுவாமி ஸ்ரீகிருஷ்ணர் அலங்காரத்தில் அருள்பாலித்தார். வீதி உலாவில் நான்கு மாடவீதியில் இருப்புறமும் திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்று பக்தி முழக்கமிட்டு, மனம் உருகி சுவாமி தரிசனம் செய்தனர். இன்றிரவு அன்ன வாகன வீதியுலா நடைபெற உள்ளது.

Related Stories: