கர்தார்பூர் திறப்பு விழாவிற்கு மன்மோகன் சிங்குக்கு அழைப்பு: பாகிஸ்தான் அமைச்சர் தகவல்

இஸ்லாமாபாத்: நவம்பர் மாதம் நடைபெறும் கர்தார்பூர் வழித்தடத் திறப்பு விழாவுக்கு முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை அழைக்க பாகிஸ்தான் அரசு முடிவு  செய்துள்ளதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி  தெரிவித்துள்ளார். சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குரு  நானக் தேவ், கடைசிக் காலத்தில் பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூரில்  வசித்தார். அவரது நினைவாக, சர்வதேச எல்லையில் இருந்து சுமார் 3 கி.மீ.  தொலைவில் ரவி நதிக்கரையில் தர்பார் சாகிப் குருத்வாரா  அமைக்கப்பட்டது. இந்நிலையில், இந்தியாவின் பஞ்சாப் மாநிலம்,  குருதாஸ்பூர் மாவட்டத்தின் தேரா பாபா நானக் பகுதியிலுள்ள குருத்வாராவையும்,  பாகிஸ்தானின் கர்தார்பூர் தர்பார் சாகிப் குருத்வாராவையும் இணைக்கும் வகையில்,  இந்தியாவில் உள்ள சீக்கியர்கள் விசா இன்றி புனிதப் பயணம் மேற்கொள்ள  இந்த வழித்தடம் அமைக்கப்பட்டு வருகிறது. இது வரும் நவம்பர் 9ம் தேதி  திறக்கப்பட உள்ளது.

இந்நிலையில், கர்தார்பூர் வழித்தட திறப்பு  விழாவிற்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை அழைக்க முடிவு செய்துள்ளதாக  இந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் முகம்மது குரேஷி தெரிவித்துள்ளார். இது  தொடர்பாக கூறுகையில், ``கர்தார்பூர் வழித்தட திறப்பு விழாவில் பங்கேற்க  பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் என்ற முறையில் அரசின் சார்பில் முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அழைப்பு விடுக்கிறேன். முறைப்படியான  அழைப்பு விரைவில் அனுப்பப்படும். அவர் மத ரீதியாக அதிக பற்றுடையவர்.  பாகிஸ்தான் மக்களால் அதிகம் மதிக்கப்படுகிறவர். அதனால்தான் அவருக்கு  அழைப்பு விடுக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. குரு குருநானக்கின்  550வது பிறந்த நாளை கொண்டாட கர்தார்பூர் வரும் அனைத்து சீக்கியர்களையும்  வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்’’ எனத் தெரிவித்தார். ஆனால், பாகிஸ்தான் அரசிடம் இருந்து தங்களுக்கு இதுபோன்ற தகவல் எதுவும் வரவில்லை என்று மன்மோகன் சிங்கின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related Stories: