பந்திப்பூர் தேசிய நெடுஞ்சாலை தினமும் 9 மணி நேரம் மூடல் எதிரொலி : இளைஞர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்கிறார் ராகுல் காந்தி

திருவனந்தபுரம் : கர்நாடக - கேரளா இடையே பந்திப்பூர் தேசிய நெடுஞ்சாலை தினமும் 9 மணி நேரம் மூடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளை நேரில் பங்கேற்கிறார். சாலையை கடக்கும் வனவிலங்குகள் வாகனங்கள் மோதி இறந்துவிடுவதால் தினமும் இரவு நேரத்தில் பந்திப்பூர் தேசிய நெடுஞ்சாலையை 9 மணி நேரம் மூட வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் இளைஞர்கள் கடந்த 25ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வயநாடு மக்களவைத் தொகுதி உறுப்பினரும் காங்கிரஸ் மூத்தத் தலைவருமான ராகுல் காந்தி, இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் நாளை பங்கேற்க இருக்கிறார். இது குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல், பந்திப்பூர் நெடுஞ்சாலை தினமும் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை மூடப்படுவதால் வயநாடு - மைசூரு இடையே வசிக்கும் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். பந்திப்பூர் தேசிய நெடுஞ்சாலையை 9 மணி நேரம் மூடப்படுவதை எதிர்த்து வயநாட்டில் நடைபெறும் போராட்டத்தில் நாளை நேரில் பங்கேற்க இருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்து இருக்கிறார்.   

Related Stories: