திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்: விஷ்வ சேனாதிபதி ஊர்வலம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும், வருடாந்திர பிரமோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்குகிறது. இதையொட்டி நேற்று கோயிலில் அங்குரார்ப்பணம் நடைபெற்றது. சீனிவாச பெருமாளின் சர்வ சேனாதிபதியான  விஷ்வ சேனாதிபதியை கோயில் அர்ச்சகர்கள், ஜீயர்கள் முன்னிலையில் மேற்கு திசையில் உள்ள வசந்த மண்டபத்திற்கு நாதஸ்வரங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்தனர். அங்குள்ள சுத்தமான பகுதியில் மண் எடுக்கப்பட்டு கோயிலில் உள்ள யாக சாலையில் 9 பானைகளில் வைத்து நவதானியங்கள் செலுத்தி முளைகட்டும் விதமாக பூஜை செய்யப்பட்டது.

தொடர்ந்து பிரமோற்சவத்தையொட்டி இன்று மாலை கருடன் உருவம் வரையப்பட்ட கொடி ஏற்றப்படுகிறது. பிரமோற்சவத்தின் முதல் நாளான இன்று இரவு பெரிய சேஷ வாகனத்தில் தேவி, பூதேவி சமேதராக மலையப்ப சுவாமி நான்கு மாடவீதிகளில் எழுந்தருளி அருள் பாலிக்கிறார். சீனிவாச பெருமாள் குடியிருக்கும்  மலையும்,  அவர் சயனித்து இருப்பதும் சேஷத்தின் (ஆதிசேஷன்) மீது என்பதால் பிரமோற்சவத்தின் முதல் நாளில் ஏழு தலைகளுடன் கூடிய பெரிய சேஷவாகனத்தில் சுவாமி வீதிஉலா நடக்கும்.

பட்டு வஸ்திரங்கள்

பிரமோற்சவ கொடியேற்றம் முடிந்ததும், ஆந்திர மாநில அரசின் சார்பில் பட்டு வஸ்திரங்களை முதல்வர் ஜெகன் மோகன் சமர்ப்பிக்கிறார்.  முன்னதாக, திருமலையில் கட்டப்பட்ட வகுலமாதா பக்தர்கள்  ஓய்வு அறை, திரு ச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் அருகே கட்டப்பட்டுள்ள பத்மாவதி நிலையத்தையும் திறந்து வைக்கிறார்.

Related Stories: