காஷ்மீர் பிரச்னையில் ஐநா.வை நாடினார் நேரு செய்தது இமாலய தவறு: அமித் ஷா குற்றச்சாட்டு

புதுடெல்லி: `‘காஷ்மீர் விவகாரத்தில் ஐநா.வை நேரு அணுகியது மிகப் பெரிய இமாலயத் தவறு,’ என்று அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார். ‘சங்கல்ப்’ முன்னாள் உறுப்பினர்களின் கூட்டமைப்பு மாநாடு டெல்லியில் உள்ள நேரு நினைவு அரங்கில் நேற்று நடந்தது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: கடந்த 1948ல் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு, காஷ்மீர் பிரச்னைக்காக ஐநா.வை அணுகினார். இது இமாலயத்தை விட மிகப்பெரிய தவறு. காஷ்மீரில் கட்டுப்பாடுகள்  விதிக்கப்பட்டு உள்ளதாக தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. அப்படி கூறுபவர்களின் எண்ணத்தில்தான் தடை உள்ளது. மக்கள் இயல்பு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். பல பத்திரிகையாளர்கள் சுதந்திரமாக அங்கு சென்று வருகின்றனர்.

கடந்த வாரம் முழுவதும் நியூயார்க்கில் நடந்த ஐநா பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற உலகத் தலைவர்களில் ஒருவர் கூட காஷ்மீர் பிரச்னை பற்றி பேசவில்லை. இது பிரதமர் மோடியின் ராஜதந்திரத்துக்கு கிடைத்த வெற்றி. 1947ம் ஆண்டு 630 சமஸ்தானங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு இந்தியா உருவாக்கப்பட்டது. ஆனால், காஷ்மீர் மட்டும் அப்போது முதலே பிரச்னையாக இருந்து வருகிறது. கர்நாடகா, டெல்லி, குஜராத், மேற்கு வங்கத்தையோ இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று கூற மாட்டோம். ஆனால், காஷ்மீரை நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என்று கூறுகிறோம். காஷ்மீர் ஒருங்கிணைப்பிற்காக ஜன சங்கம் 11 போராட்டங்களை நடத்தியது. இதற்காக சியாமா பிரசாத் முகர்ஜி தனது வாழ்வையே அர்ப்பணித்தார். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: