குப்பம் தொகுதி வெற்றியை எதிர்த்து வழக்கு சந்திரபாபு நாயுடுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

திருமலை: ஆந்திராவில் கடந்த மே மாதம் சட்டப்பேரவைக்கும், மக்களவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தது. இதில், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, குப்பம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், இந்த வெற்றியை எதிர்த்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த கிருஷ்ண சந்திரமவுலி ஆந்திர மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அந்த மனுவில் அவர், ‘சந்திரபாபு நாயுடு தேர்தலின்போது தாக்கல் செய்த வாக்குமூலத்தில், தொழில் தொடர்பான கேள்விக்கு தன்னை அரசியல்வாதி, சமூக ஆர்வலர் என்று குறிப்பிட்டுள்ளார்.

அப்போது, முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவி வகித்த நிலையில், அரசிடம் இருந்து  அவர் பெற்ற சம்பளம் குறித்த விவரங்களை குறிப்பிடாமல் தேர்தல் ஆணையத்தை ஏமாற்றி உள்ளார். எனவே, அவர் வெற்றி பெற்றதை ரத்து செய்ய வேண்டும்,’ என குறிப்பிட்டுள்ளார்.இந்த வழக்கை நேற்று முன்தினம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட ஆந்திர உயர் நீதிமன்றம், சந்திரபாபு நாயுடுவுக்கும், தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

Related Stories: