ஆதரவு பிச்சை தேடி அலைகிறது பாக்.: ராஜ்நாத் சிங் கிண்டல்

மும்பை: ‘‘கடற்படையை மேலும் பலப்படுத்த, புதிதாக 51 கப்பல்கள் கட்டப்படுகின்றன. இவற்றில் 49 கப்பல்கள் உள்நாட்டிலேயே கட்டப்படுகின்றன,’’ என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். ராஜ்நாத் சிங் நேற்று மும்பையில் ஐஎன்எஸ் காந்தேரி நீர்மூழ்கி கப்பல் மற்றும் ஐ.என்.எஸ். நீல்கிரி போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:சில நாடுகள் கெட்ட நோக்கங்களை கொண்டுள்ளன. மும்பையில் நடந்ததைப் போன்ற ஒரு தாக்குதலை நடத்த அவை சதித்திட்டம் தீட்டியுள்ளன. கடல் வழியாக வந்து இந்தியாவின் கடலோர பிராந்தியங்களில் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் அவர்களின் திட்டம் ஒருபோதும் நிறைவேறாது. காஷ்மீர் விவகாரத்தில் உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவுக்கு ஆதரவு அளித்து வரும் நிலையில் உலக அரங்கில் பாகிஸ்தான் வீடு, வீடாக சென்று ஆதரவு தேடி கதவைத் தட்டிக் கொண்டிருக்கிறது. இது கார்ட்டூன் வரைபவர்களுக்கு ஒரு கருத்தை தருவதற்கு மட்டுமே பயன்படும்.

ஐஎன்எஸ் காந்தேரி நீர்மூழ்கி கப்பலை பணியில் ஈடுபடுத்தி இருப்பதால் இந்தியாவின் தாக்கும் சக்தி இன்னும் அதிகரித்துள்ளது என்பதை பாகிஸ்தான் புரிந்துக் கொள்ள வேண்டும். ராணுவத்தை வலுப்படுத்துவதிலும் நவீனப்படுத்துவதிலும் அரசு உறுதியாக இருக்கிறது. இந்த பிராந்தியத்தில் அமைதியை சீர்குலைப்பவர்கள் மீது கடற்படை கடுமையான நடவடிக்கை எடுக்கும். இந்தியா தனது கடற்படை குறித்து பெருமைப்படுகிறது. 1971ம் ஆண்டு நடந்த போரில் நமது கடற்படை மிகச்சிறப்பாக பணியாற்றி பாகிஸ்தான் கடற்படையின் முதுகெலும்பை உடைத்ததை ஒருபோதும் மறக்க முடியாது. நம்முடைய அண்டை நாடு நம்மை சீர்குலைக்க விரும்புகிறது. அண்டை நாட்டில் ஆளும் அரசே தீவிரவாதத்தை வளர்த்துவிடுவதும், ஆதரவு அளித்து வருவதும் நமக்கு மிகப்பெரிய சவாலாகும்.

ஆனால் நாம் வலிமையான மனோதிடத்துடன் இருக்கிறோம், எந்த கடினமான முடிவுகளையும் எடுக்க அரசு தயங்காது. உதாரணமாக ஜம்மு காஷ்மீரில் 370வது பிரிவை நீக்கிய முடிவை குறிப்பிடலாம். நம்முடைய விமானம் தாங்கி கப்பல்களையும், நீர்மூழ்கி கப்பல்களையும் நாமே வடிவமைக்கிறோம். இதுவரை 51 கப்பல்கள் கட்டுவதற்கு நாம் பல்வேறு கப்பல் கட்டும் தளங்களில் ஆர்டர் கொடுத்துள்ளோம், இதில் 49 உள்நாட்டிலேயே கட்டப்படுகிறது.கடற்படையை நவீனமயமாக்கவும், திறன் உள்ளதாக மாற்றவும் தேவையான நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக நவீன ஆயுதங்கள், சென்சார்கள், ரேடார்கள் போன்றவை வழங்கப்படுகின்றன. இந்தியப் பெருங்கடலில் இந்தியக் கடற்படை என்பது மிகப்பெரிய பாதுகாப்பு வழங்கும் பிரிவாக இருந்து வருகிறது.  இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.

Related Stories: