மெட்ரோ ரயில், மாநகராட்சி நிர்வாகம் இணைந்து ஷெனாய் நகர் திருவிக பூங்காவில் 1,250 மரங்களை நட வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.பி.சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட 45 பேர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: மெட்ரோ சுரங்கப்பாதை ரயில் சேவை ஷெனாய் நகர் திருவிக பூங்கா பகுதிக்கு கீழ் பகுதியில் செல்கிறது. பூங்கா இருந்த பகுதியில் தற்போது ஷெனாய் நகர் ரயில் நிலையம் இயங்கி வருகிறது.  மெட்ரோ ரயில் பணிக்காக திருவிக நகர் பூங்காவில் இருந்த பழமையான மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் துறையின் அனுமதியின்றி இப்பணிகளை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் மற்றும் சென்னை மாநகராட்சி, சிஎம்டிஏ  ஆகியவை மேற்கொண்டுள்ளன.   சுரங்கப்பாதை பணிகள் முடிந்ததும் அந்த பூங்காவை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டு வருவோம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் உறுதியளித்தது. ஆனால், தற்போது இந்த உறுதியை மீறி பூங்கா அமைந்துள்ள பகுதியில் ஸ்டேஷன்  மற்றும் பயணிகள் வசதி மையம், மால்கள் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது சட்டவிரோதம். எனவே, சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் நடைபெறும் கட்டிடப் பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும். திருவிக பூங்காவை பழைய நிலைக்கு மாற்றுமாறு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ‘ஒருபுறம் வளர்ச்சி திட்டம் என்ற பெயரில் மரங்கள் வெட்டப்படும்போது, மறுபுறம் சுற்றுச்சூழலையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. எல்லா வளர்ச்சி திட்டங்களுக்கும் சுற்றுச்சூழல் சான்று இல்லை என்று  அந்த திட்டங்களை நிறுத்தினால் வளர்ச்சி எப்படி ஏற்படும். எனவே, கட்டிடப் பணிகளுக்கு தடை கேட்பதை ஏற்க முடியாது.

 அதே நேரத்தில், ஷெனாய் நகர் பகுதியில் மெட்ரோ ரயில் பணிகளுக்காக வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக 1,250 மரங்கள் நடப்படவுள்ளதாக அதிகாரிகள் இந்த நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளனர். அந்த உறுதியின்படி ஷெனாய் நகர்  திருவிக பூங்காவில் புதிதாக 1,250 மரங்களை நட்டு அந்த பூங்காவை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டு வரவேண்டும். இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது,’ என உத்தரவிட்டனர்.

Related Stories: