நாடுகாணி சோதனைச்சாவடியில் நள்ளிரவில் புகுந்த காட்டு யானை

கூடலூர் :  நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் செல்லும் சாலையில் உள்ள நாடுகாணி கேரளா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லும் சாலை சந்திப்பு பகுதியாக உள்ளது. இங்கு வனத்துறை மற்றும் காவல்துறை சோதனைச் சாவடி உள்ளன. நாடுகாணி சந்திப்பு பகுதியை ஒட்டிய கீழ் நாடுகாணி, தாவர மரபியல் பூங்கா, பொன்னூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அடிக்கடி காட்டு யானைகள் வந்து செல்வது வழக்கம். இங்குள்ள  நாடுகாணி சாலை சந்திப்பு பகுதியில் வாகன போக்குவரத்து இரவு பகலாக இருப்பதால் காட்டுயானைகள் இப்பகுதிக்கு வந்தது கிடையாது.

 இந்நிலையில் கடந்த மாதம் பெய்த மழையால் நாடுகாணி வழியாக செல்லும் சாலையில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு இரவு நேரத்தில் இப்பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு காட்டு யானை ஒன்று கீழ் நாடுகாணி பகுதியில் இருந்து வந்து சோதனைச்சாவடி பகுதிக்குள் நுழைந்தது. அதை பார்த்து அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் அலறியடித்து ஓடி அருகில் இருந்த வனத்துறை சோதனைச் சாவடி கட்டிடத்துக்குள் தஞ்சமடைந்தனர்.

சிறிதுநேரம் சாலையில் அங்கும் இங்கும் நடமாடிய காட்டு யானை பின்னர் அங்கிருந்து கீழ்நாடுகாணி பகுதிக்கு சென்றது. எப்போதும் இல்லாத வகையில் நாடுகாணி சாலை சந்திப்பு பகுதிக்கு காட்டுயானை இரவில் வந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: