ஜேகேஎல்எப் மீது தடை நீட்டிப்பு: டெல்லி தீர்ப்பாயம் உத்தரவு

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி (ஜேகேஎல்எப்) மீது  விதிக்கப்பட்ட தடையை, டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்பாயம் நீட்டித்து  உத்தரவிட்டுள்ளது.காஷ்மீரில் செயல்பட்டு வரும் யாசின்  மாலிக்கின் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியை, பிரிவினையை தூண்டுவதாகவும், தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில்  இருப்பதாகவும் கூறி தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த மார்ச் 22ம் தேதி தடை செய்தது. இந்த தடையை  விதிப்பதற்கு காரணமாக, ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி செய்த கடத்தல், கொலை,  வெடிகுண்டு தாக்குதல், பணம் பறித்தல், 1990ல் இந்திய விமானப்படையை சேர்ந்த  4 அதிகாரிகளை கொன்றது, 1989ல் முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் முப்தி  முகமது சையத் மகள் ரூபயா சையத் கடத்தல் உள்ளிட்ட 101 வன்முறை சம்பவங்களை  மத்திய அரசு மேற்கோள் காட்டியுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கு  நேற்று டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சந்தர் சேகர் தலைமையிலான  தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, `ஜம்மு காஷ்மீர்  விடுதலை முன்னணி அமைப்பின் உறுப்பினர்கள், தலைவர்கள் சட்ட விரோத  நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுவதற்கான போதிய ஆதாரங்கள் உள்ளன. எனவே, அதன்  அடிப்படையில் இந்த அமைப்பு சட்ட விரோத அமைப்பாக அறிவிக்கப்படுகிறது. இதன்  மீது விதிக்கப்பட்டுள்ள தடையும் நீட்டிக்கப்படுகிறது,’ என்று தீர்ப்பாயம்  அறிவித்தது.

Related Stories: