பீகாரில் எஸ்ஐயை மிரட்டியதாக மத்திய அமைச்சர் மீது வழக்கு

பக்சார்: பீகார் மாநிலம் பக்சார் மக்களவை தொகுதி எம்பியாக இருப்பவர் அஸ்வனி குமார் சவுபே. இவர் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சராகவும் உள்ளார். கடந்த 23ம் தேதி அமைச்சர் அஸ்வனி குமார் தனது தொகுதியில் மக்கள் குறைகேட்கும் முகாம் நடத்தினார். அப்போது பாஜ நிர்வாகி லட்சுமண் துபே என்பவர் நயா போஜ்பூர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் ராஜிவ் ரஞ்சன், தன்னை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்போவதாக நோட்டீஸ் அனுப்பியிருப்பது குறித்து அமைச்சரிடம் புகார் தெரிவித்தார்.

அப்போது அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த அந்த எஸ்ஐ ராஜிவ் ரஞ்சனை அமைச்சர் அஸ்வனி குமார் சவுபே பொதுமக்கள் முன்னிலையில் சரமாரியாக திட்டினார். `லட்சுமண் உனக்கு குண்டர்போல தெரிகிறாரா? குண்டர் என்றால் யார் என்று தெரியுமா? அவர் மீதான உங்களது கருத்தை மாற்றிக் கொள்ளாவிட்டால் உனது பதவியை இழக்க நேரிடும். உனது போலீஸ் உடையை கழற்ற வேண்டியிருக்கும்’ என அமைச்சர் மிரட்டினார்.

சமூக வலைதளங்களில் இந்த காட்சி வைரலான நிலையில், தன்னை மிரட்டியதாக சப் இன்ஸ்பெக்டர் அளித்த புகாரின் பேரில் மத்திய அமைச்சர் அஸ்வனி குமார் சவுபே மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related Stories: