காதல் பறவைகள் இடையேயும் மோதல்: மஜ்னுவிடம் சண்டைப்போட்டுவிட்டு கூண்டைவிட்டு வெளியேறிய லைலா.... போலீசார் பாதுகாப்புடன் மீட்டனர்

திருமலை: காதல் பறவைகள் சண்டையிட்டுக்கொண்டதில் வெளியேறிய பறவையை போலீசார் பாதுகாப்புடன் பத்திரமாக மீட்டனர். திருப்பதியில் நடைபெற்ற இந்த வினோத சம்பவம் வருமாறு; திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகே உள்ள பாலாஜி நகரில் வசிப்பவர் மோகன். இவர் பெங்களூரில் இருந்து லைலா, மஜ்னு என்ற பெயரில் இரண்டு பறவைகளை கடந்தாண்டு ரூ.2 லட்சத்துக்கு வாங்கியுள்ளார். இந்த பறவைகளை தனது வீட்டில் இருக்கும் கூண்டில் வைத்து பராமரித்து வந்தார். இதில் லைலா என்ற பறவையை மட்டும் காலையில் கூண்டில் இருந்து திறந்து விடுவார். பின்னர் இது பல இடங்களில் சுற்றிவிட்டு மீண்டும் மாலையில் கூண்டிற்கு வந்து விடுமாம். பின்னர் தன்னுடன் உள்ள மஜ்னுவுடன் கொஞ்சி விளையாடுமாம்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு மஜ்னு-லைலா இடையே சண்டை ஏற்பட்டபோது கூண்டில் இருந்து வெளியேறிய லைலா மீண்டும் திரும்பி வரவில்லை. அதிர்ச்சியடைந்த மோகன் பல இடங்களில் தேடினார். நேற்று திருமலையில் உள்ள சேஷாத்திரி நகர் காட்டேஜ் சாலையில் லைலா சுற்றிக்கொண்டிருப்பதாக தெரியவந்தது. கோயிலுக்கு சென்ற பக்தர்கள் சிலர், லைலாவின் அழகை கண்டு, அதனை தங்களது செல்போனில் படம் எடுக்க திரண்டனர். இதைபார்த்த போக்குவரத்து போலீசார், லைலாவுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க, பக்தர்களை அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டு பாதுகாப்பு அளித்தனர்.

இதுபற்றி தெரிந்ததும் உரிமையாளர் மோகன், மஜ்னுவுடன் லைலா இருக்கும் இடத்திற்கு விரைந்தார். அங்கு லைலாவை சமாதானம் செய்து கூண்டிற்குள் வரவழைக்க முயற்சி செய்தார். ஆனால் லைலா கூண்டிற்குள் வராமல் அடம்பிடித்தது. சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு லைலா, மஜ்னுவுடன் சமாதானம் அடைந்து கூண்டிற்குள் வந்தது. இதனால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: