ஆதம்பாக்கம் பகுதியில் கால்வாய் அடைப்பு காரணமாக குளத்திற்குள் தேங்கும் கழிவுநீர்: நிலத்தடி நீர் பாதிக்கும் அவலம்

ஆலந்தூர்: ஆதம்பாக்கத்தில் கால்வாய் அடைப்பால் வெளியேறும் கழிவுநீர், மழைநீருடன் கலந்து குளத்தில் தேங்குவதால், கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தி அதிகரித்து வருகிறது. சென்னை மாநகராட்சி, 12வது மண்டலம், 163வது வார்டுக்கு உட்பட்ட ஆதம்பாக்கம் கிழக்கு கரிகாலன் தெருவில் மாநகராட்சி குளம் உள்ளது. இப்பகுதியின் நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கிய இந்த குளத்தை அதிகாரிகள் முறையாக பாராமரிக்காததால், தூர்ந்து காணப்பட்டது. இதனால், மழைநீர் சேமிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே, இந்த குளத்தை தூர்வாரி சீரமைக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். அதன்பேரில், கடந்த 2013ம் ஆண்டு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி 14 லட்சத்தில் நடைபாதை, இருக்கை வசதிகளுடன் குளம் சீரமைக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக வறட்சி காரணமாக இந்த குளம் வறண்டு காணப்பட்டது.

இந்நிலையில், அருகில் உள்ள கருணீகர் தெரு, ஏரிக்கரை தெரு போன்ற பகுதிகளில் உள்ள கால்வாய்களில் அடைப்பு காரணமாக, கழிவுநீர் வெளியேற முடியாமல் தேங்கி வந்தது. கடந்த சில நாட்களாக பெய்த மழையால், மழைநீருடன் கழிவுநீர் கலந்து குளத்தில் பாய்ந்துள்ளது.இதனால் குளம் முழுவதும் கழிவுநீராக மாறி துர்நாற்றம் வீசுகிறது. மேலும், கொசு உற்பத்தி அதிகரித்து இப்பகுதி மக்களுக்கு மர்ம காய்ச்சல் பரவும் நிலை உள்ளது.  அதுமட்டுமின்றி குளத்தில் தேங்கும் கழிவுநீரால், நிலத்தடி நீர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, இந்த குளத்தில் தேங்கியுள்ள கழிவுநீரை வெளியேற்றி, மழைநீர் சேமிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: