ஐ.ஜி முருகன் மீதான விசாரணையை தெலுங்கானா-வுக்கு மாற்றிய ஐகோர்ட்டின் உத்தரவுக்கு இடைக்கால தடை: உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: லஞ்சஒழிப்புத்துறை ஐ.ஜி முருகனுக்கு எதிரான பாலியல் வழக்கு விசாரணையை தெலுங்கானாவுக்கு மாற்றிய உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. பாலியல் வழக்கை தெலுங்கானாவுக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதனை எதிர்த்து ஐ.ஜி.முருகன் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் அதற்கு இடைகாலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அதேபோல் பாலியல் புகார் பற்றி பதிலளிக்க பெண் எஸ்.பி மற்றும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி.முருகன் மீது, பெண் எஸ்.பி. ஒருவர் பாலியல் புகார் அளித்ததை தொடர்ந்து, விசாகா கமிட்டி விசாரணை அமைத்தது. இதனிடையே, விசாகா கமிட்டியில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்க்கக் கோரியும், முருகனை வேறு துறைக்கு மாற்றக்கோரியும் பெண் எஸ்.பி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், ஐ.ஜி.முருகன் மீதான வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரிக்க வேண்டுமென உத்தரவு பிறப்பித்தார்.  இந்த உத்தரவை எதிர்த்து முருகன் மேல்முறையீடு செய்த நிலையில், இதுகுறித்து நீதிபதிகள் வினித் கோத்தாரி, கார்த்திகேயன் அமர்வு விசாரணை நடத்தியது. இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி வழங்கப்பட்டது. அதில், சிபிசிஐடிக்கு மாற்றும் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டதுடன், ஐ.ஜி.முருகன் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கக்கூடாது எனவும் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை தெலங்கானா காவல்துறைக்கு மாற்றப்படுவதாகவும், விசாரணை ஆவணங்களை உடனடியாக தெலங்கானா போலீசுக்கு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

தெலங்கானா காவல்துறையில் உள்ள மூத்த பெண் அதிகாரி தலைமையில் விசாரணை நடத்தவேண்டும் எனவும் அம்மாநில டி.ஜி.பி.க்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஆறு மாத காலத்துக்குள் விசாரணையை முடித்து அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் எனவும், வழக்கை தெலங்கானாவிற்கு மாற்றுவதால், தமிழக காவல்துறை மீது நம்பிக்கை இல்லை என்று அர்த்தம் கொள்ள வேண்டாம் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இந்த நிலையில், ஐ.ஜி. முருகன் மீதான பாலியல் புகாரை தெலுங்கானா காவல்துறைக்கு மாற்றி உத்தரவிட்டதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், பாலியல் புகார் குறித்த விவரங்களை அளிக்குமாறு பெண் எஸ்.பிக்கும், தமிழக அரசுக்கும் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: