இஸ்ரேல் கூட்டணி ஆட்சியில் முதலில் பிரதமராவது யார்? இங்கி பாங்கி போட பரிந்துரை

ஜெருசலேம்: இஸ்ரேலில் கூட்டணி அரசு அமைந்தால், முதலில் பிரதமராவது யார் நெதன்யாகுவா, பென்னி கண்ட்ஸா என ‘டாஸ்’ போட்டு முடிவு செய்யும்படி ‘கிங் மேக்கராக’ செயல்படும் கட்சித் தலைவர் ஒருவர் யோசனை கூறியுள்ளார். இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கு கடந்த வாரம் 2வது முறையாக நடந்த நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 120 உறுப்பினர்கள் கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பென்னி கண்ட்ஸின் ப்ளூ அண்ட் ஒயிட் கட்சி 33 இடங்களை பிடித்தது. பிரதமர் நெதன்யாகுவின் கர்சர்வேட்டிவ் லிகுட் கட்சி 31 இடங்களில் வென்றது. கூட்டணி கட்சிகளை சேர்த்தால் நெதன்யாகுவுக்கு 55 உறுப்பினர்களின் ஆதரவும், பென்னி கண்ட்ஸிக்கு 57 உறுப்பினர்களின் ஆதரவும் உள்ளன. இஸ்ரேல் பெய்டெனு என்ற கட்சிக்கு 8 உறுப்பினர்கள் உள்ளனர்.  கூட்டணி அரசு அமைய இந்த கட்சியின் ஆதரவு முக்கியம். அதனால் இஸ்ரேல் பெய்டெனு கட்சித் தலைவர் லிபர்மேன் ‘கிங்மேக்கராக’ உருவெடுத்துள்ளார்.

நெதன்யாகு கூட்டணியில் ‘அல்ட்ரா ஆர்த்தோடெக்ஸ்’ என்ற மதவாத கட்சியும், பென்னி கண்ட்ஸ் கூட்டணியில் அரபு கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த இரு கட்சிகள் இடம் பெற்றிருக்கும் கூட்டணியில் இடம்பெற லிபர்மேனுக்கு விருப்பம் இல்லை. அதனால் வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளார். நெதன்யாகுவும், பென்னி கண்ட்ஸூம் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்த பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் அதிபர் ரிவ்லின் ஈடுபட்டுள்ளார். பிரதமர் பதவிக்கு நெதன்யாகு, பென்னி கண்ட்ஸ் இருவருமே போட்டி போடுவதால், சுழற்சி முறையில் பிரதமர் பதவி வகிக்கலாம் என ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. முதலில் யார் பிரதமராக பொறுப்பேற்பது என்பதை, நாணயம் மூலம் ‘டாஸ்’ முடிவு செய்யலாம் என ‘கிங் மேக்கர்’ லிபர்மேன் ஆலோசனை வழங்கியுள்ளார்.

Related Stories: